Last Updated : 04 Oct, 2017 01:35 PM

 

Published : 04 Oct 2017 01:35 PM
Last Updated : 04 Oct 2017 01:35 PM

விவேகம் வெற்றியா, தோல்வியா? - என்ன சொல்கிறார்கள் திரையுலகில்?

அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' திரைப்படம் வெற்றியா, தோல்வியா என்று திரையுலகில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் உங்களுக்காக..

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் 'விவேகம்'. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 24-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. அன்றைய தினத்திலிருந்தே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. இப்படத்தை நம்பி பெரும் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் கலக்கம் அடைந்தார்கள்.

தற்போது 'விவேகம்' திரைப்படம் வெற்றியா, தோல்வியா என்று அப்படத்தின் வியாபார வட்டத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:

பெரும் எதிர்பார்ப்பால்  பெரும் விலை கொடுத்து விநியோக உரிமையை கைப்பற்றினார்கள். 55 கோடி வரை தமிழ்நாடு உரிமை விற்கப்பட்டது. முதல் வார வசூல் பிரமாதமாக இருந்தது. அனைத்து விமர்சனங்களையும் தாண்டி நல்ல கூட்டம் இருந்தது.  இதனால் மகிழ்ச்சியில் இருந்தோம்.

இப்படத்துக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்துப் பார்த்தால் மிகப்பெரிய தோல்விப் படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு 'விவேகம்' தோல்விப்படமில்லை. தயாரிப்பாளருக்கு லாபகரமாக இருந்தாலும், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சில ஏரியாக்களில் 30% வரை நஷ்டமும், சில ஏரியாக்களில் அதற்கு குறைவான நஷ்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

'வேதாளம்' படத்துக்கு குடும்பத்தினர் கூட்டம் அதிகளவில் இருந்ததால், வசூல் அற்புதமாக இருந்தது. ஆனால், 'விவேகம்' படத்தில் குடும்பத்தினரை உள்ளே அழைத்துவரும் விஷயம் எதுவுமே இல்லை. அது தான் இப்படத்தின் முக்கிய பிரச்சினையாக பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x