Last Updated : 14 Oct, 2017 07:57 PM

 

Published : 14 Oct 2017 07:57 PM
Last Updated : 14 Oct 2017 07:57 PM

மெர்சல் டிக்கெட் முன்பதிவு: காத்திருக்கும் திரையரங்குகள்

அக்டோபர் 18-ம் தேதி வெளியாகவுள்ள 'மெர்சல்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு, பல்வேறு திரையரங்குகள் காத்திருக்கின்றன.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இப்பேச்சுவார்த்தை நேற்று (அக்டோபர் 13) சுமுகமாக முடிவுற்றது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் டிக்கெட் கட்டண விவரங்கள் மற்றும் 8% கேளிக்கை வரி உள்ளிட்டவற்றை தெளிவுப்படுத்தினார்கள். இதனால் 'மெர்சல்' வெளியீட்டில் எவ்வித பிரச்சினையுமில்லை என்று தகவல் வெளியானது.

இன்று (அக்டோபர் 14) காலை முதலே சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் 'மெர்சல்' முன்பதிவு தொடங்கப்பட்டது. சில முக்கிய திரையரங்குகளில் இன்னும் 'மெர்சல்' முன்பதிவு தொடங்கப்படவில்லை.

இது குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "தணிக்கை பிரச்சினை முடிவுற்று சான்றிதழ் கிடைத்தவுடனும், தமிழக அரசு புதிய டிக்கெட் கட்டண விவரங்களை முறையாக அரசாணை வெளியிடும் வரை 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏஜிஎஸ் திரையரங்க முன்பதிவு குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசின் டிக்கெட் கட்டண விவரத்தின் அரசாணைக்காக காத்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு 'மெர்சல்' முன்பதிவு தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் பல முக்கிய திரையரங்குகளில் 'மெர்சல்' முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும், விலங்குகள் நல வாரியத்தின் கடிதம் மற்றும் தணிக்கை குழுவின் பதிலால் 'மெர்சல்' வெளியீட்டு சிக்கலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x