Published : 21 Oct 2017 07:58 PM
Last Updated : 21 Oct 2017 07:58 PM
அரசியல்வாதிகள் சினிமாவை விட வேண்டும். படத்தை சேர்ந்த நட்சத்திரத்தை அறிக்கைகளால் தூண்டிவிட்டு தலைவர்களாக மாற்றக் கூடாது என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனஞ்ஜெயன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''படத்தில் வரும் சில வசனங்களை ஏன் அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. திரைப்படங்கள் நேரத்தை கடத்த, பொழுதுபோக்கு மட்டுமே. அது மக்களிடையே எந்த மாற்றத்தையும் உருவாக்காது.
திரைப்படங்கள் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என்றால் எந்தத் துறையிலும் ஊழல் இருக்கக்கூடாது, குடிகாரர்கள் இருக்கக்கூடாது (ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் விற்பனை அதிகரித்து வருகிறது) எந்த மூலையிலும் குற்றங்கள் நடக்கக்கூடாது.
இந்தியன், ரமணா, முதல்வன் ஆகியவை பார்க்க நல்ல படங்களே. ஆனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அதுதான் யதார்த்தம்.
அரசியல்வாதிகள் சினிமாவை விட வேண்டும். படத்தை சேர்ந்த நட்சத்திரத்தை அறிக்கைகளால் தூண்டிவிட்டு தலைவர்களாக மாற்றக் கூடாது. இது போன்ற தனிப்பட்ட தாக்குதலும், அறிக்கைகளுமே சினிமாவில் கவனம் வைத்திருக்கும் நட்சத்திரங்களை அரசியல் பக்கம் திருப்புகிறது. அதை தமிழகம் மீண்டும் தாங்காது.
ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவைப் போல, நம் மாநிலத்திலும், மக்களிடையேயும் நீண்ட கால மாற்றம் கொண்டு வரும் வலிமையான அரசியல் தலைவர்தான் தமிழ்நாட்டுக்குத் தேவை. தயவு செய்து சினிமாவை தனியாக விடுங்கள்'' என்று தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT