Published : 21 Oct 2017 09:00 PM
Last Updated : 21 Oct 2017 09:00 PM
'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா மீதான விமர்சனக் காட்சிகளுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையை உரக்கச் சொன்னால் பாஜக ஏன் பதறுகிறது? என்று நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களை திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்கவில்லையென்றால், 1991-ல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தைப் போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறிச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் மத்திய அரசு தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
அதே போல் தமிழ்நாட்டில் தமிழக பாஜக தலைவர்கள் மெர்சல் திரைப்படத்தைக் கண்டித்து பேட்டியளிக்கின்றனர். கர்நாடகத்தினருக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.!
'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா மீதான விமர்சனக் காட்சிகளுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையை உரக்கச் சொன்னால் பாஜக ஏன் பதறுகிறது?
மக்களைப் பாதிக்கும் திட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வழியாக எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஒரு படைப்பாளி தனது படைப்பு வழியாக மக்களுக்கு சுட்டிக்காட்டுகிறார் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்காக படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கச் சொல்லி பாஜகவினர் வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு.
பாஜகவின் இதுபோன்ற செயல்பாடு ஜனநாயக கொள்கைக்கு முரணானது. பேச்சுரிமை, எழுத்துரிமை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். கருத்துரிமைக்கு எதிராக விடப்படும் மிரட்டல்.
தணிக்கை செய்து வெளிவந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். அதே போல் தமிழ்நாடு அரசு விதித்த கட்டணங்களை தாண்டி திரையங்களில் அதிக விலை நிர்ணயத்து வசூலிக்கின்றனர். அதையும் விஜய் உள்ளிட்டோர் கவனித்து குரல் கொடுக்க வேண்டும்'' என்று கருணாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT