Published : 01 Oct 2017 06:24 PM
Last Updated : 01 Oct 2017 06:24 PM
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சைத் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார் விதார்த்
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு மேடையிலிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உள்ளிட்ட படக்குழுவினரையும் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.
இது குறித்து விதார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'விழித்திரு' நிகழ்ச்சியில் நடந்தது பற்றி என் தரப்பு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். டி.ராஜேந்தர் சார் போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். டி.ராஜேந்தர் சார் ஒருவரை இவ்வாறு புண்படுத்திப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. தன்ஷிகாவுக்கு அன்று நடந்தது நம் அனைவரையுமே உலுக்கி விட்டது.
இவையெல்லாம் ஜோக் போலத்தான் தொடங்கியது. டிஆர் எப்போதும் அவரது அடுக்கு மொழிக்கும் பளிச்சென உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் புகழ்பெற்றவர், அவர் மேடையில் சிலரை கேலியும் செய்துள்ளார். நாம் அனைவரும் இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். ஆனால் இது ஒருநேரத்தில் சீரியசாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உணர்ந்த போது அனைத்தும் கையை மீறி விட்டது.
நானும் மற்ற முக்கியஸ்தர்களுடன் மேடையில்தான் இருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இதனால் தன்ஷிகாவையோ அல்லது எந்த ஒருவரையோ புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.
எனக்கு தன்ஷிகாவை கடந்த 3 ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். அவரைப் போன்ற ஒரு தங்கமான நபரைப் பார்க்க முடியாது. பொதுவாக பிரஸ் மீட்கள், ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிகளில் சிறிது கூடுதல் நேரம் இருந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் நடந்தது எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்த நான் உடனடியாக கிளம்பி விட்டேன். நான் அங்கேயே இதற்காக எதிர்வினை புரிந்திருக்க வேண்டும், அதற்காக தன்ஷிகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் அனைவரும் ஒரு குடும்பம், எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள், பத்திரிகை தரப்பு ஆதரவு தேவை. உங்களது ஆதரவுக்காக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் எப்போதும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT