Published : 13 May 2023 07:10 AM
Last Updated : 13 May 2023 07:10 AM
ராமநாதபுர மாவட்டம் ஏனாதி கிராமத்தில் சாதி மோதல் வந்துவிடாமல் ஊரைக் காத்து வருகிறார்கள் நண்பர்களான, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சந்திரபோஸும் (பிரபு) சித்ரவேலும் (இளவரசு). இவர்களைப் போலவே பிரபுவுக்கு வேண்டிய செங்குட்டுவனும் (சாந்தனு) இளவரசு மகன் மதிமாறனும் (சஞ்சய் சரவணன்) பங்காளிகளாக நட்பு பேணுகிறார்கள். காய்ந்து கிடக்கும் அந்த வறண்ட பூமியின் கனிம வளத்தைச் சுரண்ட, கார்பரேட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கவும் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகவும் ஊரைப் பிரிக்க நினைக்கிறார்கள், உள்ளூர் எம்.எல்.ஏவும் (அருள்தாஸ்), அமைச்சர் ராசாகண்ணுவும் (பி.எல்.தேனப்பன்). இதற்கு செங்குட்டுவன்- இந்திரா (ஆனந்தி) காதலைப் பகடைக்காயாக வைத்து, ஒன்றாக இருந்த ஊரைப் பிரிக்கிறார்கள். அமைதியாக இருந்த ஊர், அரிவாள் தூக்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். கருவேல மர ஒழிப்பின் பின்னணியில் இருக்கும் அரசியல் சிக்கல்களையும் பேசியிருக்கும் அவர், அம்மாவட்ட எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியையும் துணிந்து அடித்திருக்கிறார்.
அவர் எடுத்துக்கொண்ட நோக்கம் பெரிது என்றாலும் அதை இன்னும் சரியாகச் சொல்லியிருந்தால், பலமாகக் கைதட்டியிருக்கலாம். முதல் பாதி வழக்கமான காட்சிகளால் நகர, இரண்டாம் பாதி எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறது. சாதி, தண்ணீர் பஞ்சம், கார்பரேட், தவறாகப் புரியப்படும் காதல் எனச் செல்லும் திரைக்கதை, இறுதியில் அங்கும் இங்குமாகச் சென்று ஓர் அதிர்ச்சியைத் தந்து கடந்து போகிறது. அந்த அதிர்ச்சி, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் பெரும் குறை.
சாந்தனு, அசலான கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். நண்பனுடன் நெகிழ்வது, காதலியிடம் உருகுவது, மோதலில் ஆக்ரோஷம் என அவர் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆனந்தி வழக்கமான காதலியாக வந்துபோகிறார். ஊரைப் பிரிக்கக் காதலைப் பயன்படுத்தும் மாரியின் (முருகன்) வில்லத்தனம் சரியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவர் சொல்வதை எல்லாம் நம்பும், போலீஸ் வேலைக்குக் காத்திருக்கும் மதியின் கதாபாத்திர வடிவமைப்பு பலவீனம். ஆனால், அதில் நடித்திருக்கும் சஞ்சய் சரவணன், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெரியவராக வரும் பிரபு, நண்பர் இளவரசு, சுஜாதா, தீபா சங்கர், சுயநல அரசியல்வாதிகள் அருள்தாஸ், அமைச்சர் பி.எல்.தேனப்பன் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில், ராமநாதபுர நிலபரப்பு அப்படியேபதிவாகியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின்பின்னணி இசையும் ‘அத்தனை பேர் மத்தியில’ பாடலும் ரசிக்க வைக்கின்றன. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்ட முயன்றிருக்கிறது.
படத்தில் சாதி பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், ‘குனிஞ்சு நின்ன நம்மை நிமிர வச்சது அவங்கதான்’ என்பது போன்ற வசனங்கள் மூலமும் ஊரில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்தான் பிரச்சினையைத் தூண்டுவதாகக் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதும் நடுநிலை தவறிய எழுத்து. இவற்றைக் களைந்து இன்னும் அழுத்தமாக அணுகியிருந்தால், ‘இராவண கோட்டம்’ ஈர்த்திருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT