Published : 06 May 2023 04:15 PM
Last Updated : 06 May 2023 04:15 PM
“ ‘க/பெ ரணசிங்கம்’ படத்துக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என ‘ஃபர்ஹானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “வார வாரம் எனது படங்கள் வெளியாவதாக மனுஷ்யபுத்திரன் கூறுகிறார். அது என்னுடைய கையில் இல்லை. தயாரிப்பாளர்களின் கையில்தான் உள்ளது. ‘ஃபர்ஹானா’ ரீலிஸான பிறகு 2 வாரங்களுக்குப் பிறகு தான் அடுத்த படம் வருகிறதாம். 2022-ம் ஆண்டு என்னுடைய ஒரு படமும் ரிலீஸாகவில்லை. டிசம்பரில் மட்டுமே ‘ட்ரைவர் ஜமுனா’ வெளியானது. இதனாலேயே பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.
முக்கியமான படங்களான ‘க/பெ ரணசிங்கம்’ மாதிரியான படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. நிறைய படங்கள் நடிக்கிறோம். எல்லா படங்களையும் விரும்பி அதற்கான உழைப்பை செலுத்திதான் நடிக்கிறேன். அப்படித்தான் இந்தப் படமும். படத்தின் இயக்குநர் நெல்சன் இந்தக் கதையை சில வரிகளில்தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சனிடம் அந்தக் கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.
இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அதுபோல தான். நாயகியை மையப்படுத்திய படங்களின் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த படம் ‘கனா’ பிறகு ‘க/பெ.ரணசிங்கம்’ அடுத்து இப்போது ‘ஃபர்ஹானா’. படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT