Published : 06 May 2023 03:17 PM
Last Updated : 06 May 2023 03:17 PM
சென்னை: ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளா, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் மோகன் ஜி, ‘ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் நான் இன்னும் பார்க்கவில்லை. ட்ரெய்லர் மட்டும்தான் பார்த்தேன். தணிக்கை செய்யப்பட்ட படத்தை நீதிமன்றம் தடை செய்யாது. அந்த அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது. நம் ஊரிலும் நிறைய இப்படம் தொடர்பாக பிரச்சினைகள் போய்க் கொண்டு இருக்கின்றன.
படத்தை பார்த்து விட்டு விவாதம் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அதைத் தாண்டி எல்லா மதங்களிலும் இருக்கும் தவறுகளை சொல்லலாமே தவிர, ஒட்டுமொத்தமாக ஒரு மதமே இப்படித்தான் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை இப்படம் செய்திருந்தால் நிச்சயமாக அதனை நான் எதிர்ப்பேன். ஆனால், உண்மையான சம்பவங்களை தரவுகளோடு சொல்லியிருந்தால் இப்படத்தின் இயக்குநர் பக்கம் நிற்பேன். நான் படம் பார்க்காததால் என்னால் அதிகமாக பேச முடியவில்லை. ஒட்டுமொத்தமாக எந்த சமூகத்தையும் குற்றம் சொல்வதை எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று மோகன் ஜி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT