Published : 03 May 2023 08:31 PM
Last Updated : 03 May 2023 08:31 PM

மனோபாலா உடலுக்கு விஜய், கவுண்டமணி உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி

சென்னை: மறைந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர்கள் விஜய், கவுண்டமணி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் நாளை காலை 10 மணி அளவில் வளசரவாக்கத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மனோபாலாவின் மகன் ஹரீஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தில் மனோபாலாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து நடிகர் கவுண்டமணி, ஆர்யா, மோகன், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகுமார், பி.வாசு, ஹெச்.வினோத், மணிரத்னம், சித்தார்த், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பி.வாசு பேசுகையில், “இதயத்திற்கு நெருக்கமான ஒருவரை நான் இழந்திருக்கிறேன். விவேக், மயில்சாமி, இன்று மனோபாலா. மிகச் சிறந்த நடிகர், இயக்குநர் மனோபாலா. அவர் இறந்த செய்தி கேட்டதும் என் உடல் உறைந்துவிட்டது. அண்மையில் தான் நானும் மனோபாலாவும் கோயம்புத்தூர் சென்றோம். அவருடன் இருக்கும்போது சிரிக்க வைத்துக்கொண்டேயிருப்பார். மனோபாலாவை பிடிக்காது என யாரும் சொல்லமாட்டார்கள். அவருக்கு என் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

சேரன் பேசுகையில், “எங்களுடன் அவர் இருந்த நாட்களில் எப்போதும் எங்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். இன்றைக்குத்தான் முதன்முறையாக எங்களை அழ வைத்துள்ளார். அவரின் இழப்பு அதிர்ச்சியைத் தாண்டி நம்ப முடியவில்லை. எல்லோரிடமும் அன்பு காட்டக்கூடியவர். நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி நல்ல மனிதரை இழந்தது தான் வருத்தம். எல்லா பிரச்சினைகளுக்கும் முன்வந்து நிற்பவர். உடல்நிலையைத் தாண்டி மன அழுத்தமும் ஒரு காரணம். ஒரு படத்தை எடுத்து அதை வெளியிட முடியாமலிருந்த சூழல் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும். சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். மனோபாலாவுக்கு எனது அஞ்சலிகள்” என்றார். | வாசிக்க: புகழஞ்சலி: 90ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை யாவரையும் மகிழ்வித்த மகத்தான திரைக் கலைஞர் மனோபாலா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x