Last Updated : 02 May, 2023 05:34 PM

 

Published : 02 May 2023 05:34 PM
Last Updated : 02 May 2023 05:34 PM

‘மாமன்னன்’ முதல் பார்வையில் வடிவேலு லுக்... - சில ஃப்ளாஷ்பேக் சம்பவங்களும் சமகால தமிழ் சினிமாவும்!

‘மாமன்னன்’ படத்தின் முதல் பார்வை மே 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால், ஏப்ரல் 30-ம் தேதி இரவே படக்குழு போஸ்டரை வெளியிட்டது. அவ்வளவுதான்... சோஷியல் மீடியாவை கைப்பற்றியது ‘மாமன்னன்’ ஃபர்ஸ்ட் லுக். அப்படி என்ன ஸ்பெஷல் என்றால்.. வடிவேலு தான் அன்றைய ட்ரெண்டிங்!

அப்படியொரு வடிவேலுவைப் பார்த்து தசாப்தங்களான ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட் அது. போஸ்டர் வெளியானதும் சொல்லி வைத்தார்போல எல்லாரும் பேசியது வடிவேலுவின் அந்த லுக்கைத்தான். தன் உடல்மொழியுடன் இயைந்த நயமிக்க நகைச்சுவையை டைமிங் மாறாமல் வெளிப்படுத்தும் கலைஞன் ஒருவனிடம் கையில் துப்பாக்கி கொடுத்து ‘டெரர்’ லுக்கில் உட்கார வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

‘லாங்ல பாத்தா தான்டா காமெடியா இருப்பேன். கிட்டத்துல பாத்தா டெரரா இருப்பேன்டா டெரரா..’ என்ற அவரின் வசனமே அந்த லுக்குக்கு சாலப் பொருத்தம். சில நேரங்களில் வடிவேலு என்ற கலைஞனை வெறும் காமெடியோடு மட்டும் இந்த தமிழ் சினிமா சுருக்கிவிட்டதோ என்ற அவரின் தீவிர ரசிகர்களின் ஆதங்கத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்கு காரணமுண்டு, வடிவேலின் தொடக்க கால படங்கள் அவரை ஒரு ‘கேரக்டர் ஆர்டிஸ்ட்’ ஆகவே வார்த்தெடுத்தது. ‘தேவர் மகன்’ படத்தில் கை வெட்டபட்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் வடிவேலு, கமலுடன் பேசும் அந்தக் காட்சியில் வலியுடன் கூடிய முகபாவனைகளை கச்சிமாக கடத்தியிருப்பார்.

அண்மையில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று இணையத்தை கலக்கிய, ‘ராஜ காளியம்மன்’ படத்தில் கவுசல்யாவுடன் வடிவேலு நடந்து வரும் காட்சியில், வில்லத்தனம் கலந்த சிரிப்புடன் அவருக்கு வைக்கும் க்ளோசப் ஷாட்டில், ‘உன்ன கூட்டிட்டு வர்றது உன் அண்ணனு நெனைச்சியா’ என்ற அந்த டயலாக்கும் அதற்கான ரியாக்‌ஷனும் மிரட்டும். அந்த படம் முழுவதும் சீரியஸ் கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார் வடிவேலு. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற குடும்ப படங்களில் காமெடி கதாபாத்திரம் கலந்த சீரியஸ் டோனில் அவரது நடிப்பு கவனம் பெற்றிருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ‘சங்கமம்’ படத்தில் மணிவண்ணனுடன் அவர் பேசும் காட்சி அட்டகாசம். கிட்டத்தட்ட 2 நிமிட சிங்கிள் ஷாட்டில் ‘சாமி, எங்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மிதானே... 40 அடி அடிச்சுட்டு போகவேண்டியது தானே... வாங்கிக்குவோம்ல. உங்க புள்ளைங்க தானே நாங்க... அத விட்டுட்டு வெளியே போங்கடான்னு சொல்லிட்டீங்களே..’ என பேசி உருக வைத்திருப்பார். கதாபாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்திய அந்த நடிப்பும், கண்ணீரும் கலங்கடிக்க வைத்திருக்கும். அந்தக் காட்சி போதும் வடிவேலு என்ற நடிகனை அறிந்துகொள்ள. ‘எம்டன் மகன்’ படத்தில், பணம் திருடியதற்காக பரத்தை நாசர் அடித்தது குறித்து கேள்விப்பட்டதும், நாசரை வெளுத்து வாங்கும் காட்சியும் அந்த ஆக்ரோஷமும் படம் முழுக்க இப்படியான நிறைய சீன்களில் ஸ்கோர் செய்திருப்பார்.

‘வெற்றிவேல் சக்திவேல்’ படத்தில் வரும் காட்சி அவரின் எமோஷனல் நடிப்புக்கு அத்தாட்சி. ஆஞ்சநேயர் கோயிலில் அடிவாங்கிவிட்டு வீட்டுக்கு வரும் வடிவேலுவிடம் குஷ்பு என்ன நடந்தது என்பதைக் கேட்க கண்ணீருடன் அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அதை விவரிக்கும் இடத்தில் உணர்வுகளை அழுத்தமாக கடத்தியிருப்பார். இப்படியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவால் நம்மை கலங்கடிக்கவும், நடிப்பால் ஈர்க்க வைக்கவும் முடியும் என்பதற்கு பல படங்கள் சான்று. ஆனால், அவை விரல் விட்டு எண்ணும் படங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்திருக்கும்.

அவரின் அழுத்தமான நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரங்கள் வெறும் நகைச்சுவையுடன் சுருக்கப்பட்டிருப்பது வடிவேலுவின் தீவிர ‘கேரக்டர் ஆர்டிஸ்ட்’ ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அண்மையில் வடிவேலுவின் ‘கம்பேக்’ படமாக அமைந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ நகைச்சுவை படமாக இருந்த போதிலும் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை. இந்தச் சூழலில் தான் ‘மாமன்னன்’ படத்தின் போஸ்டரில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமான முகத்துடன் காட்சியளிக்கும் வடிவேலுவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். “இதுவரை வடிவேலுவை பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள்” என்ற மாரி செல்வராஜின் பேட்டி இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இதனிடையே அண்மைத் தமிழ்சினிமாவில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே ஒருவரை அடையாளப்படுத்துவதிலிருந்து தமிழ் சினிமா நகர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியான ‘விடுதலை பாகம் 1’ அதற்கு முக்கியமான சான்று. நடிகர் சூரியின் நடிப்பு ‘இத்தனை நாட்கள் அவரை சரியாக பயன்படுத்தவில்லையே’ என்ற ஏக்கம் ரசிகர்கள் மனதில் எழுந்தது.

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குலுகுலு’ மற்றும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்களும் கூட திணிக்கப்பட்ட நகைச்சுவையின்றி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்தது. அதற்கேற்ற கதாபாத்திரமாக தன்னை மாற்றியிருந்தார் சந்தானம். தன்னுடைய முந்தைய படங்களிலிருந்த அந்த மிகை நடிப்பும், உருவகேலியுமின்றி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆக ‘நகைச்சுவை நடிகர்’, காமெடிக்காக தனி ட்ராக் என்ற இடத்திலிருந்து நகர்ந்து ‘நடிகர்’ என ஒருவரின் நடிப்பை தேவையான கேரக்டர்களுக்கு பயன்படுத்திக்கொள்வது ஆரோக்கியமான மாற்றமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x