Last Updated : 15 Sep, 2017 11:02 AM

 

Published : 15 Sep 2017 11:02 AM
Last Updated : 15 Sep 2017 11:02 AM

துப்பறிவாளன் வெற்றி எனக்கு நானே வைத்துக் கொண்ட தேர்வு: இயக்குநர் சுசீந்திரன்

'துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை எனக்கு நானே வைத்துக் கொள்ளும் தேர்வாக நினைக்கிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'துப்பறிவாளன்' தமிழகமெங்கும் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் நந்தகோபால் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

'துப்பறிவாளன்' படத்தை தனது திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினார் விஷால். இத்திரையிடலில் இயக்குநர் சுசீந்திரன் தனது தங்கையுடன் கலந்து கொண்டார். இப்படம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'துப்பறிவாளன்' படத்தின் காட்சியமைப்புகள் உலகத்தரத்திற்கு இணையாக இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை தந்தது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது.

இப்படத்தின் அனுபவம் எனக்கு நானே எழுதிக் கொண்ட தேர்வைப் போல உணர்கிறேன். ஏனென்றால் நானும், எனது தங்கையும் இத்திரைப்படத்தை பிரத்யேக காட்சியில் பார்த்தோம். மிகவும் பிரம்மிக்கும் வகையில் இத்திரைப்படம் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், 'அஞ்சாதே' படம் பார்த்த போது இருந்த ஒரு எமோஷனல் கனெக்ட் இத்திரைப்படத்தில் எனக்கு ஏற்படவில்லை. ஆகவே வணிக ரீதியான வெற்றியை இத்திரைப்படம் பெறுமா என்ற யோசனையுடன் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது என் தங்கையிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கு என் தங்கை படம் மிக நன்றாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது என்று கூறினாள்.

இது போன்று சில சமயங்களில் நான் படத்தை ரசிப்பதற்கும், ரசிகர்களாகிய நீங்கள் ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 'கோலிசோடா' படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று பிரத்யேக காட்சியில் பார்க்கும்போது தெரியவில்லை. 'ஜீவா' படம் பெரிய வெற்றியடையும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இது போல் சில விஷயங்கள் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மறையாக நடக்கும்.

'துப்பறிவாளன்' படம் பற்றி என் தங்கையின் கருத்தை கேட்ட பின், ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தியது. எனவே, இத்திரைப்படத்தின் வெற்றியை எனக்கு நானே வைத்துக் கொள்ளும் தேர்வாக நினைக்கிறேன். மீண்டும் இத்திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளேன்.

இது 'துப்பறிவாளன்' படத்திற்கான வாழ்த்து மடலா? அல்லது விமர்சனமா? என்று யாரும் கேட்க வேண்டாம். இப்படம் பற்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று மனதார நினைக்கிறேன்

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x