Last Updated : 18 Sep, 2017 06:06 PM

 

Published : 18 Sep 2017 06:06 PM
Last Updated : 18 Sep 2017 06:06 PM

பீரியட் படத்தில் நடிக்க நீண்ட நாட்களாக ஆசை: துல்கர் சல்மான்

பீரியட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் படமான 'மகாநதி'யில் நடிக்கும் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய துல்கர், ''மேற்கில் ஏராளமான அற்புதப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் எடுக்கப்படுகின்றன. பீரியட் படத்தில்நடிக்க நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மலையாளத் திரையுலகில் அத்தகைய படங்களை எடுப்பதற்கான பட்ஜெட் இல்லை.

அந்தக் குறையை 'மகாநதி' தீர்த்துள்ளது. அப்படத்தில் நானும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படத்தில் நான் ஜெமினி கணேசனைப் போல் இருக்க மாட்டேன். இருக்கவும் முடியாது. நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் செயற்கைத் தன்மையை நான் விரும்பவில்லை. நான் நினைப்பதெல்லாம் ஒன்றுதான். 1950-ல் நான் மிகப்பெரிய நடிகராக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதாகத்தான் என்னுடைய நடிப்பு இருக்கும்'' என்றார்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படம் 'மகாநதி'. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x