Published : 24 Apr 2023 07:25 PM
Last Updated : 24 Apr 2023 07:25 PM

‘யாத்திசை: தமிழர்கள் எழவேண்டிய திசை...’ - படக்குழுவுக்கு சீமான் பாராட்டு

“யாத்திசை’ தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை” என படக்குழுவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அனைத்தும் புதிய முயற்சிகள் என்பதைத் தாண்டி தமிழ்த்தேசிய இனமக்களுக்குத் தற்போது அவசியம் தேவையான ஒன்று என்பதில் பெரு மகிழ்வும், தம்பியின் இந்தச் சிந்தனையை நினைத்து பெருமையும் அடைகிறேன்.

படத்தில் வரலாற்றுக் கருத்துக்கள் மற்றும் புதிய பொருள்பொதிந்த இலக்கியச் சொற்கள் இவைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தது வரலாற்று பேராய்வாளர் ம.சோ.விக்டர் அவர்களது நூல்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சொல்லுகின்ற செய்தி தமிழர் இனத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் காட்சியின் மூலமாகப் பதிவு செய்தமை வியப்பின் உச்சம்.

படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றாகிய வேலன் வெறியாட்டு நிகழ்வின் மூலம் நிகழ்த்துகின்ற கொற்றவை வழிபாடு நிகழ்வில் வருகின்ற இரண்டு நிமிட காட்சி அமைப்பிற்குள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வரலாற்றையும் சொல்லி இருப்பது தமிழர்களின் வரலாற்று மீட்புக் காட்சியாக நான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் வரும் போர்க்களக் காட்சியொன்றில் இறந்துபோன வீரர்களைத் திருப்பி மார்பினைப் பார்த்து, விழுப்புண் இல்லாதவர்களை நெஞ்சினில் வாளால் கீறி புதைக்கும் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்தேன். தற்காலத்தில் இளைய தலைமுறையினரால் தமிழரின் வீரம் பொதிந்த வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நிறைவு எனக்கு வந்தது. இதுபோன்று படத்தின் ஓவ்வொரு காட்சிகளிலும் பொதிந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழர்கள் இந்தப் படத்தினைக் கொண்டாடவேண்டிய அவசியத்தின் காரணமாக நான் நினைப்பது பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து சொற்களை எடுத்து தமிழர் வாழ்வில் மறைக்கப்பட்ட செந்தமிழ் சொற்களை மீட்டுருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது. இலக்கியச் சொற்களை உரையாடல் மொழியாக வைத்திருப்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய பதிவு.

பல நூறு கோடிகளைச் செலவிட்டுக் காட்டுகின்ற பிரமாண்டங்களை, முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மூலமாகப் படத்தயாரிப்புக் குழு மிகக்குறைந்த செலவினத்திலேயே செய்திருப்பது பாராட்டிற்குரியது. கதையின் நாயகர்கள், கதையையும், இயக்குநரையும் நம்பி ஒரு ரூபாய் கூட இதுவரை ஊதியம் பெறாமல் நடித்து, படம் சிறப்பாக ஓடினால் நாங்கள் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி தமிழர் வரலாற்று மீட்சிக்குச் சேவையாற்றியிருக்கிறார்கள்.

படம், கதை. கருக்களம், பயன்படுத்தப்பட்ட உரையாடல் மொழி, நடித்த நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு என அனைத்தும் படத்தினைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு 7 நூற்றாண்டில் வாழும் உணர்வை காட்சியின் ஊடாக நிகழ்த்தியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

யாத்திசை என்ற வரலாற்று பேராவணத்தைப் படைத்த படத்தின் இயக்குநர் தம்பி தரணி ராசேந்திரன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, வைதேகி, சமர் மற்றும் படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், இசையமைத்த தம்பி சக்கரவர்த்தி, ஒலிவடிவம் செய்த தம்பி சரவணன் தர்மா, ஆடை வடிவமைப்பு செய்த தம்பி சுரேஷ் குமார், சண்டை காட்சிகள் அமைத்த ஓம் சிவ பிரகாஷ், கலை இயக்குநர் இரா.ரஞ்சித்குமார், ஒளியோவியம் படைத்த அகிலேஷ் காத்தமுத்து என அனைவரும் தங்கள் முழுமையான உழைப்பை இப்படத்தில் செலுத்தியுள்ளார்கள் என்பதைப் படம் பார்க்கும்பொது உணர முடிகிறது. அனைவருக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.

தமிழ் நிலத்தின் வரலாறு மீட்கப்படவேண்டும், தமிழர் நிலத்தில் தமிழர் அதிகாரம் பெறவேண்டும் என்று உழைக்கின்ற ஓவ்வொரு தமிழ்த்தேசியப் பிள்ளைகளும் மறக்காமல் தமது குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய அவசியமான படம் யாத்திசை. இந்தப் படத்தை மாபெரும் வெற்றி பெற வைப்பதன் மூலம், இனிவரும் காலங்களில் இது போன்ற படங்கள் நிறைய வெளிவர உதவும் என்று நம்புகிறேன்.யாத்திசை : தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை…!” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x