Published : 24 Apr 2023 03:12 PM
Last Updated : 24 Apr 2023 03:12 PM
சென்னை: காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ல் நடிகர் கார்த்தி, சம்ந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றுள்ளார். கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனைக்கு தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளான இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லிங்குசாமி தரப்பில், "காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கெனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாக" தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT