Published : 20 Apr 2023 02:59 PM
Last Updated : 20 Apr 2023 02:59 PM
சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்தார். மேலும், திவ்யாவை தாக்கியதாகக் கூறிவது தவறானது. திவ்யாதான் தன்னை துன்புறுத்தினார்.இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT