Published : 15 Apr 2023 07:48 AM
Last Updated : 15 Apr 2023 07:48 AM

சொப்பன சுந்தரி: திரை விமர்சனம்

சொப்பன சுந்தரி படத்தின் ஒரு ஷாட்

படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, பேராசை கொண்ட அம்மா லட்சுமி (தீபா சங்கர்), பேச இயலாத அக்கா தேன்மொழி (லட்சுமிப் பிரியா), ஆகியோருடன் வறுமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்). இந்நிலையில் அவருக்கு நகைக்கடை மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. இதை வைத்து தனது சகோதரி திருமணத்தை நடத்தி விட நினைக்கிறார் அகல்யா. அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, வீட்டை விட்டு வெளியேறிய அண்ணன் துரை (கருணாகரன்), கார் தனக்கே சொந்தம் என்று வருகிறார். விவகாரம் காவல் நிலையம் செல்கிறது. காரின் உண்மையான உரிமையாளர் யார்? கருணாகரன் ஏன் அதை உரிமை கொண்டாடினார்? காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது மீதி கதை.

பணமின்றி தவிக்கும் குடும்பத்துக்கு அதிர்ஷ்டமாக வரும் ஒரு கார்மூலம் டார்க் காமெடி கதையை, கலகலவென சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். அதற்கான, அருமையான களமும் கூட.

அதிர்ஷ்ட கார், காருக்காகவே லட்சுமிப் பிரியாவைத் திருமணம் செய்ய சம்மதிக்கும் சாரா, எதிர்பாராத விபத்து, காருக்குள் ஒரு சடலம், காரை கைப்பற்றத் துடிக்கும் அண்ணன் மற்றும் மோசடி மச்சான், பாலியல் நோக்கம் கொண்ட காவல் ஆய்வாளர் என பரபரக்கவும் படபடக்கவும் வைக்கிற காட்சிகள் சில இடங்களில் சிரிப்பையும் சிலிர்ப்பையும் உருவாக்குகின்றன. ஆனால், பார்வையாளர்களைக் கதைக்குள் முழுமையாக மூழ்கடிக்க முடியாமல் திணறுகிறது லாஜிக் இல்லாத திரைக்கதை.

நகைக்கடையில் வேலை பார்ப்பவருக்கே அதிர்ஷ்டக் காரை கொடுப்பார்களா? என்பதில் தொடங்கி ஏகப்பட்ட கேள்விகள் இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான நடிப்பு அதை மறக்கடிக்க வைக்கிறது. தனக்கு ஏற்ற கதைகளை லாவகமாகத் தேர்வு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தக் கதையையும் அப்படியே தேர்வு செய்திருக்கிறார். அவர் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம்.

லட்சுமிப் பிரியாவுக்கு வாய்ப்பு குறைவென்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். மகள்கள் எதிர்ப்பார்கள் என்று அவர்களிடம் சொல்லாமல் தனது கணவரை தீபா சங்கர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சியில் குபீர் சிரிப்பு. அண்ணன் கருணாகரன், மச்சான் மைம் கோபி, காவல் ஆய்வாளர் சுனில் ரெட்டி, போலி கார் ஓனர்ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தங்கள் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, கதை நகர்வுக்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. அஜ்மல் தஹ்சீன் இசையில் பாடல்களும் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு டார்க் காமெடி கதைக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது.

தர்க்கப்பிழைகளைச் சரி செய்து இன்னும் சரியாக எழுதப்பட்டிருந்தால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முக்கியமான படமாகக்கூட இருந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x