Published : 14 Apr 2023 02:39 PM
Last Updated : 14 Apr 2023 02:39 PM
‘அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட்டால் குடி கெட்டு குற்றம் பெருகும்’ என்பது தான் படத்தின் ஒன்லைன்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) நகைக்கடை ஒன்றில் வேலைபார்த்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். வாய்பேச முடியாத தனது அக்கா தேன்மொழிக்கு (லக்ஷ்மி ப்ரியா) திருமணம் செய்ய வேண்டும், அவருக்கு பிறகு தனது திருமணம் என நிதி நெருக்கடியில் இருக்கும் அவருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. அதை வைத்து அக்காவின் திருமணத்தை நடத்தி விடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும்போது, அகல்யாவின் அண்ணன் துரை (கருணாகரன்) பரிசு விழுந்த காரில் தனக்கும் பங்கு கேட்கிறார். இந்த பஞ்சாயத்து காவல்நிலையம் வரை செல்ல இறுதியில் அந்த கார் யாருக்கு கிடைத்தது? அந்த காரில் இருந்த மற்ற சிக்கல்கள் என்ன? என்பதுதான் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் மீதிக்கதை.
‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை வசனத்தை டைட்டிலாக வைத்து பெண் மைய கதாபாத்திரங்களின் வழியே கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். ‘அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல், இருப்பதை வைத்து நிறைவு கொள்ளும் வாழ்க்கையே சிறந்தது’ என்பதை பதிய வைக்க கையாளப்பட்டிருக்கும் டார்க் காமெடி வகையறா திரைக்கதை சில இடங்களில் நன்றாகவே கைகொடுக்கிறது. நகைச்சீட்டை திருடும் காட்சிகள், தீபா சங்கர் தன் கணவரை வைத்து போடும் மாஸ்டர் ப்ளான், ரெடின் கிங்ஸிலிக்கான சீக்வன்ஸ்கள், படத்தின் இடைவேளை காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
மொத்த படத்தையும் காமெடியாக கொண்டு செல்வதா? சீரியஸாக நகர்த்துவதா? என்ற தடுமாற்றம் காட்சிகளில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதனாலேயே சீரியஸான காட்சிகளை அதற்கான அழுத்தத்தில் உணர முடியவில்லை. எளிதில் கணிக்கும் காட்சிகளும், திருப்பங்களும் படத்தின் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யத்தை கூட்டாமல் கடக்கிறது. க்ளைமாக்ஸூக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஆபாச காட்சிக்கான அர்த்தம் விளங்கவில்லை; அதற்கான தேவை எழாதபோது குடும்ப பார்வையாளர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் அந்தக்காட்சி திணிப்பு.
பெண்களை முன்னணி கதாபாத்திரங்களாக கொண்ட படத்தில் கற்பு தொடர்பான வசனங்களும், ‘பொண்ணுங்க அப்பாவ நம்பி மட்டும் தைரியமா வாழ்றதில்லை... அண்ணன நம்பியும் தான்’ என்ற சார்பு நிலையை கெட்டிப்படுத்தும் வசனங்களும், அதை பொருளாதார சுதந்திரத்துடன் தனித்து இயங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரமே பேசுவதும் நகை முரண்.
மிடுக்கான உடல்மொழியுடன், அழுத்தமான நடிப்பில் பிரச்சினைகளை தனியே டீல் செய்யும் முன்னணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு தனித்து தெரிகிறது. தனியொரு ஆளாக படத்தை முன்னோக்கி நகர்த்துகிறார். தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்துள்ள லக்ஷ்மி ப்ரியா வாய்பேச முடியாத பெண்ணாக தனக்கு கொடுக்கப்பட்டட கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
அப்பாவி முகம், அதற்கேற்ற நடிப்பு, சன்னமான குரல் என நகைச்சுவை காட்சிகளில் தீபா ஷங்கரின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்யும் ரெடின் கிங்ஸ்லீ தன்னுடைய ட்ரேட் மார்க் நடிப்பை வழங்க தவறவில்லை. காவல்துறை அதிகாரியாக வரும் சுனில் ரெட்டி கதாபாத்திரம் உரிய அழுத்தத்துடன் எழுதப்படாததால் அவர் செய்யும் வில்லத்தனங்கள் நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தவிர, கருணாகரன், மைம் கோபி, சாரா, சதீஷ் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கின்றனர். ‘டார்க் காமெடி’ என்றதும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட நடிகர்கள் குழுவை களமிறக்கியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சில இடங்களில் காமெடி காட்சிகளுக்கான சூழலை மெருகேற்றுகிறது. பல இடங்களில் வரும் ரிபீட் இசை அயற்சி. அஞ்சமல் தஹ்சீன் இசையில் பாடல்கள் பெரிதாக மனதோடு ஒட்டவில்லை. பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் வசீகரம். மொத்தத்தில் படம் ஒரு டார்க் காமெடிக்கான முயற்சி தான் என்றாலும்.. அந்த முயற்சி சில இடங்களில் மட்டும் திருவினையாக்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT