Published : 07 Apr 2023 07:27 PM
Last Updated : 07 Apr 2023 07:27 PM

“இந்த ஆண்டு இறுதியில் ‘தங்கலான்’ ரிலீஸ்; கமலுக்காக கதையை எழுதுகிறேன்” - பா.ரஞ்சித் தகவல்

“இந்த ஆண்டு இறுதியில் ‘தங்கலான்’ படம் திரைக்கு வரும். கமல்ஹாசனுக்கான கதையை எழுதி வருகிறேன். கவர்னர் அவர் வேலையைத் தவிர மற்ற வேலைகளையெல்லாம் பார்க்கிறார்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“பிகே ரோசி திரைப்பட விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும். அந்த வகையில் நீலம் பண்பாட்டு மையம் கலை பண்பாட்டு ரீதியாகவும், வரலாறு ரீதியாகவும் உள்ள விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இந்த நிகழ்வு. திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. புகைப்பட கண்காட்சி, தலித் இலக்கியம், அரசியல் நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. சாதியத்திற்கு எதிரான மனநிலை கொண்ட படைப்பாளிகள் தங்களுடைய தளங்களில் எப்படி இயங்குகிறார்கள் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இது” என்றார்.

வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு தூத்துக்குடி வன்முறை நடந்ததாக கூறிய ஆளுநரின் கருத்து குறித்து கேட்டதற்கு, “கவர்னர் அவருக்கான ஆளுநர் வேலையை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்து வருகிறார் என நினைக்கிறேன். இது ஒரு மோசமான விஷயம். எந்த தகவலின் அடிப்படையில் அவர் பேசுகிறார்? பொது சமூகத்தில் இப்படியான பேச்சை பேசி சர்ச்சை ஏற்படுத்துகிறார். கவர்னரின் இத்தகைய பேச்சை ஏற்றுகொள்ள முடியாது” என்றார்.

ரோகினி திரையரங்க விவகாரம் குறித்து பேசிய ரஞ்சித், “ரோகினி திரையரங்க விவகாரம் மட்டும்தான் தற்போது தெரியவந்துள்ளது. மால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழங்குடியின மக்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அரசுதான் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்.

வேங்கைவயல் விவகாரத்தில் பொது தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும் என்ற சீமான் கருத்து குறித்து பேசுகையில், “பொதுவாகத்தான் எல்லாமே வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அப்படி இருக்க விடாத காரணத்தால் தான் தனியாக சில விஷயங்களை கொடுங்கள் என கேட்கிறோம். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்” என்றார்.

தங்கலான் குறித்து பேசிய அவர், “தங்கலான் படத்தில் கிட்டதட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎஃப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மேமாதம் முடிந்துவிடும் என நினைக்கிறேன். கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என நினைக்கிறேன்.

கமலுக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். ‘சர்பட்டா பரம்பரை’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது. சந்தோஷ் நாரயணன் படத்திற்கு இசையமைப்பாரா என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x