Published : 31 Mar 2023 02:44 PM
Last Updated : 31 Mar 2023 02:44 PM

விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடுகிறது அரசு. அரசு உத்தேசிக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறது. தமிழர் மக்கள் படையை கைது செய்ய முயற்சிக்கும் அரசு போலீஸாரைக் கொண்டும், மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மக்கள் படை இயக்கத்தை கூண்டோடு அழிக்க முயற்சிக்கிறது. இதில் இரண்டு தரப்பிலும், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இந்தப் போராட்டத்தில் வென்றனரா? மக்கள் படையை காவல் துறை கைது செய்கிறதா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

18 பக்கங்களைக் கொண்ட ‘துணைவன்’ சிறுகதையில், கதையின் மையப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் தனது கற்பனைக் கலந்த கதையைக் கொண்டு வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே நாவலை படமாக எடுத்து வெற்றி கண்டவர், இந்த முறை இந்தச் சிறுகதையின் மூலம், உலகம் முழுவதும் மூன்றாம் உலக நாடுகள், வளரும் நாடுகளில் நிகழும் கனிம வள கொள்ளைக்கு எதிராக பெருங்கதையாடலை நடத்தியிருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களின் பசிக்கும், தாகத்துக்கும் காவு கொடுக்கப்படும் பாமர மக்களின் சதைக்கும், ரத்தத்துக்கும் மருந்து தடவியிருக்கிறது ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம்.

பொதுவாகவே உலகம் முழுக்கவே வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் மனித வேட்டையின் வாசம் இப்படத்தின் காட்சிகள் தோறும் வீச்சமெடுக்கிறது. மலைகளில் மலரும் காட்டுமல்லியில் கலந்திருக்கும் ரத்தக் கவிச்சியின் வாடையை படம் பார்த்துவிட்டு திரும்பும் ஒவ்வொருவரின் சுவாசித்திலும் வெற்றிமாறனின் காட்சி அமைப்புகள் கலக்கச் செய்திருக்கிறது. அதிகார அத்துமீறலுக்கு எதிரான வசனங்கள், காட்டுத்தீ போல படத்தில் அவ்வப்போது பற்றி எரிய செய்திருக்கிறது. ஒரு வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வர எத்தனிக்கும் அரசுக்கு இடையூறாக எழும் போராட்டங்களை அதிகார பலம் கொண்டு ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசுகள் எவ்வாறு கையாளும் என்பதை எந்தவித சமரசமுமின்றி இந்தப் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

வெற்றிமாறன் திரைப்படங்களின் கதாப்பாத்திரத் தேர்வு எப்போதுமே திரையில் மாயங்களை நிகழ்த்துபவை. அந்த வகையில் இந்தத் திரைப்படத்திலும் அந்த மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது. குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி, அந்தக் கதாப்பாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். குறிப்பாக, படத்தின் முதல் பாதி முழுக்கவே, மலை கிராம காவல் பணிக்குச் செல்லும் காவலர்கள், அதிகாரிகளையும் வாழ்வியல் சிக்கல் நிறைந்த அந்த சூழலையும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை விளக்கும் காட்சிகளில் எல்லாம் சூரி சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், படத்தில் வரும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் செய்யும் அசாத்தியங்கள் ஏற்கும்படியாக இல்லை. அதை இயக்குநரே தவிர்த்திருக்கலாம்.

வெற்றிமாறன் படங்களில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எப்போதும் ஜீவ ஸ்ருதியாக இருப்பார். இந்த முறை அந்தப் பணியை அவரது தங்கைக்கு கொடுத்திருக்கிறார். பவானிஸ்ரீ மலை கிராமத்துப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் பட நாயகிகளுக்கே உரிய வீரத்தை பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பாசம், காதல், சோகம், துணிவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, காவல் துறை அதிகாரிகளாக வரும் சேத்தன், கவுதம் மேனன், இயக்குநர் தமிழ் என அனைவரிடத்திலும் போலீஸாரின் மேனரிஸங்கள் மெஸ்மரைசிங் செய்கிறது.

பெருமாள் பாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி வெகு எளிதாக தனது பாத்திரத்தை கடத்தியிருக்கிறார். படத்தில் அவர் வரும் இடங்கள் சிறப்பானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முடிந்து அடுத்த பாகத்திற்கான லீட் வரும் இடங்களில் அவர் குறித்த காட்சிகள் முன்னோட்டமாக திரையில் காட்டப்படும்போது ரசிகர்கள் சிலிர்த்தெழுகிறார்கள். வெற்றிமாறன் வசனத்தில் கவுதம் மேனன் அரசு அதிகாரியாக கேட்கும் கேள்விகளும், அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி பதிலளித்து பேசும் வசனங்களில் அரசியல் நையாண்டி தூக்கலாகவே இருக்கிறது.

சுற்றிலும் மலைகள், மரங்கள், செடிகள், அரிக்கேன் விளக்குகள், காட்டாறு, பாறைகள் உருளும் மலைப் பாதைகள், லுங்கியும், துண்டும் அணிந்த யதார்த்த மனிதர்கள், குறுகலான தெருக்கள், ஓட்டு வீடுகள், டீக்கடைகள், உருவங்களற்ற நம்பிக்கையின் அடிப்படையிலான தெய்வங்கள், திருவிழாக்கள், போலீஸ் பட்டாலியன், பாரேட், செக்போஸ்ட், பத்திரிகையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் ஜீப் என படம் முழுக்க கதைக்களம் முழுவதையும் வேல்ராஜின் ஒளிப்பதிவு ஒன்றுவிடாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது. எல்லா ஃப்ரேம்களிலும் பின்னால் தென்படும் மலைகள் போலவே, படத்தின் ஒளிப்பதிவும் காட்சி அமைப்பும் படம் பார்ப்பவர்களின் மனதில் கனத்த மவுனத்தை சுமக்கச் செய்திருக்கிறது.

அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பும் அரசுக்கும், அதற்கு எதிராக போராடும் ஒரு குழுவுக்கும் இடையிலான போராட்டத்தில் இளையராஜாவின் இசை தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறது. மலைக் கிராம காட்சிகளுக்கு அவரது இசை அந்த கிராமத்தில் இல்லாத ஒரு மரத்தையும், ஒரு செடியையும் அவ்வப்போது பூக்கச் செய்கிறது. படத்தில் வரும் இரண்டு பாடல்களும் ஏற்கெனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ''வழிநெடுக காட்டுமல்லி...'' - வரும் இடம் ரசிக்கும்படியாக உள்ளது. ''ஒன்னோட நடந்தா...'' - பாடல் வரும் இடம் சற்று நீண்டுவிட்டதோ என்பதுபோன்ற தோற்றத்தை தருகிறது. மற்றபடி அவரது பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு சில காட்சிகள் அவர் சைலண்ட் விடும் இடங்கள், திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் பதற்றத்துடன் வெளிவிடும் மூச்சுக்காற்றின் ஓசையைக் கேட்க செய்திருக்கிறார் இளையராஜா.

எல்லா மனிதர்களின் வாழ்வியல் தேவைகளுக்கான ஓட்டம், சுற்றி நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் குறித்தும், சமூக பிரச்சினைகள் குறித்தும் கவலைகொள்ளச் செய்வதில்லை. அதுவும் அரசுக்கு எதிரான பிரச்சினைகள் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டைப் பூட்டிவிட்டு அடுத்து நடப்பதையும், நடக்கப்போவதையும் டிவியில் வரும் பிரேக்கிங் செய்தியைப் பார்த்து சோஷியல் மீடியாவில் அப்டேட்டாக ஷேர் செய்யும் வழக்கத்துக்கு மாறிவிட்ட எல்லோருக்காகவும் சேர்த்துதான் மலைகள், காடுகள், கடல்பரப்புகள், ஆற்றுச் சமவெளிகளென உலகின் ஏதாவது ஒரு மூலையில் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் அமைப்புகளின் விடுதைலையைப் பற்றி உருக்கமாக பேசி உறைய வைக்கிறது ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x