Published : 29 Mar 2023 04:49 PM
Last Updated : 29 Mar 2023 04:49 PM

“ப்ளேட், டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன்... சினிமா மிகவும் எளிதான விஷயம்” - ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்வு

“ப்ளேட் கழுவியுள்ளேன். டீ, காபி டம்ளர்களை எடுத்துச் சென்றுள்ளேன். டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன். இதையெல்லாம் நான் சந்தோஷமாக்கத்தான் செய்திருக்கிறேன். சினிமா எளிதான விஷயம்தான்” என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர். முருகதாஸ், “எனக்கு இவ்வளவு நாட்கள் கொடுத்த அன்பையும் ஆதரவையும் இந்தப் படத்திற்கும் கொடுங்கள். கெளதம் கார்த்திக் அற்புதமான உழைப்பைக் கொடுத்துள்ளார். நடிகர் கார்த்திக்கை நினைக்காமல் ஒரு ரொமான்ஸ் காட்சியை உருவாக்க முடியாது. ‘துப்பாக்கி’ படத்தில் ஜெயராம் வரும் ஒரு காட்சிக் கூட கார்த்திக்கை மனதில் வைத்துதான் உருவாக்கினேன். கெளதம் கார்த்திக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ரேவதி நன்றாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு நிறைய நடிப்பதற்கு வாய்ப்பு வரும். படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி என பான் இந்தியாவாக வருகிறது.

நாம் கடவுளிடம் வேண்டும் அனைத்தும் மற்றொரு மனிதனால் கொடுக்க முடிந்தது தான். அதை ஒருமனிதனே கொடுக்கும்போது கடவுளின் வேலையை நாமே எளிதாக்கி விடுகிறோம். எனக்கு 100 பேர் உதவியிருக்கிறார்கள். இந்த உலகில் எந்த மனிதனும் தனியாக உருவாகிவிட முடியாது. இன்று நான் இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு 100 பேர் எனக்கு போட்ட பிச்சை. கடவுள் கொடுத்த ஆசீர்வாதம்.

நான் கரியரில் சாப்பாடு வாங்கி கொண்டு செல்லாத கடைகள் இல்லை. ப்ளேட் கழுவியுள்ளேன். டீ, காபி டம்ளர்களை எடுத்துசென்றுள்ளேன். டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன். இதையெல்லாம் நான் சந்தோஷமாக்கத்தான் செய்துள்ளேன். இப்படித்தான் வாழ்க்கையில் மேலே வரமுடியும். சினிமா ஒன்றும் பெரிய விஷயமெல்லாம் இல்லை. நாம் என்ன கேமராவா கண்டுபிடிக்க போகிறோம். வாழ்க்கையில் நடந்ததை கதையாக சினிமாவாக்குகிறோம். அவ்வளவுதான். சினிமா ஈஸிதான். கலை இயக்குநர் சந்தானத்தின் மறைவு மிகப் பெரிய இழப்பு. அதை ஈடு செய்யவே முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x