Published : 30 Sep 2017 12:21 PM
Last Updated : 30 Sep 2017 12:21 PM

டி.ஆருக்கு வலுக்கும் எதிர்ப்பு: தமிழ் திரையுலகினர் தன்ஷிகாவுக்கு ஆதரவு

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை தொடர்பாக டி.ஆருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழ் திரையுலகினர் பலரும் தன்ஷிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் நடிகர் சங்கச் செயலாளர் விஷால், டி.ராஜேந்தருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும், இதில் தமிழ் திரையுலகினர் பலரும் தன்ஷிகாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள். அவற்றில் சில

தனஞ்ஜெயன்: வீடியோவைப் பார்த்தேன். உங்கள் தவறை சரி செய்ய உங்களால் முடிந்ததை செய்தீர்கள். ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. இதைக் கடந்து வாருங்கள். சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஜனனி ஐயர்: நீ அந்த மொத்த சூழலையும் மிகச்சரியாக கையாண்டாய். வலிமையாய் இரு.

பிரசன்னா: நீங்கள் செய்தது சரி. நல்ல பாங்கில் கண்ணியத்துடன் உங்களுக்காக நீங்கள் பேசினீர்கள். உங்கள் கடின உழைப்புதான் இன்றைக்கு உங்கள் நிலைமைக்குக் காரணம். தலை நிமிர்ந்திருங்கள்.

அஞ்சனா: சூழலை சரியாகக் கையாண்டீர்கள். நீங்கள் வலிமையான பெண். உங்களுக்கான மரியாதை அனைத்து மூலைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. அதுவே அனைத்தையும் விளக்கிவிடும்.

ஆர்.ஜே.பாலாஜி: இப்போதுதான் டி.ஆர் அவர்களின் பேச்சைப் பார்த்தேன். உங்கள் மீதி மரியாதை இருக்கிறது சார். ஆனால் நீங்கள் செய்தது ஆணவம் நிறைந்த, ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அவமரியாதையான செயல். என் பார்வையில், நீங்கள் மரியாதையைக் கேட்டுப் பெற முடியாது. சம்பாதிக்க வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணன்: தன்ஷிகாவுக்கு என் அளவுகடந்த அன்பு. நீ வலிமையான, அற்புதமான பெண். நாங்கள் அனைவரும் உன்னோடு இருக்கிறோம்.

ப்ரியா ஆனந்த்: மிகக் கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். நீங்கள் செய்தது சரி.

சாந்தனு: நீங்கள் அற்புதமானவர். பக்குவமாக சூழலைக் கையாண்டீர்கள். வாழ்த்துகள். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நடந்தது சரியல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

அருண்ராஜா காமராஜ்: ஒரு பட விளம்பர நிகழ்ச்சியில் தன்ஷிகா அவர்கள் கண்ணீர் விடுவதைப் பார்த்ததிலிருந்து கலக்கத்திலிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்.

இயக்குநர் கெளரவ்: நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. கவனம் சிதறாமல் தைரியமாக இருங்கள். உங்கள் கண்ணீர் விலைமதிக்கமுடியாதது. அதை தகுதியானவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x