Published : 13 Sep 2017 07:49 AM
Last Updated : 13 Sep 2017 07:49 AM
சட்ட விரோதமாக திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட திருப்பத்தூர் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுப்படங்கள் மற்றும் உரிய உரிமம் கொடுத்து வாங்காமல் இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்ததாக தெரிகிறது.
அந்த குழுவினர் tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை தொடர்ந்து 6 மாதங்களாக கண்காணித்து வந்ததோடு, திருட்டு விசிடி தயாரிக்க மாஸ்டர் காப்பியை தருவதற்காக சென்னைக்கு அழைத்திருக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று கவுரிசங்கர் சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்தார்.
அப்போது, கவுரி சங்கரை திருவல்லிக்கேணி போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் tamilgun.com என்ற இணையதளம் மூலம், திரைப்படங்களை வெளியிட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல் நிலையத்துக்கு வந்த நடிகர் விஷால், கவுரி சங்கரை பிடிக்க கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸாருக்கு விளக்கியதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT