Published : 19 Mar 2023 04:29 AM
Last Updated : 19 Mar 2023 04:29 AM

கப்ஜா: திரை விமர்சனம்

கர்நாடகாவில் அமராபுரம் என்ற ஊரின் மகாராஜா, வீர பகதூரின் மகள் மதுமதியும் (ஸ்ரேயா) அதேஊரை சேர்ந்த ஆர்கா என்கிற ஆர்கேஷ்வரனும் (உபேந்திரா) காதலர்கள். விமானப் படையில் பயிற்சியில் இருக்கும் ஆர்கா, விடுப்பில் ஊருக்கு வருகிறார். காதலியை சந்தித்து கல்யாணத்துக்கு உறுதி கொடுத்தவர், அடுத்த சில நாட்களில் கத்தியை தூக்குகிறார். அண்ணனின் படுகொலைக்கு பழிவாங்கப்போய், ஆர்காபுரத்தின் தாதாவாக உருவெடுக்கிறார். அவரை பிடிக்க மாநில அரசு போலீஸ் படையை அனுப்ப, இன்னொரு பக்கம் துணை ராணுவப் படை முற்றுகையிடுகிறது. ஆர்கா, விருப்பமின்றி கையிலெடுத்த வன்முறை, அவரை எங்கு கொண்டு நிறுத்தியது என்பது முதல் பாக கதை.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் நாயகனின் முன்கதையுடன் சுவாரஸ்யமாக தொடங்கும் படம், பிறகு எழுபதுகளின் கற்பனையான கர்நாடகா, ‘பம்பாய்’ என நகர்ந்து, வன்முறையின் நெடும் பயணமாக, வீடியோ கேம் ‘மோடு’க்கு மாறிவிடுகிறது.

விமானப் பயிற்சிப் பள்ளியில் இருந்து விடுமுறையில் போன விமானியைத் தேடி ஒருவரும் வராதது, சிறுவயது முதல் வளர்ந்த தனது ஆர்காபுரம்பகுதி, கலீத் என்கிற கொடூரமான தாதாவின் பிடியில் இருப்பது பற்றி நாயகனுக்கு தெரியாதது, இளவரசியான தனது மகள், சாமானியக் குடும்பத்துப் பையனைக் காதலிப்பது, அது மகாராஜாவுக்கு தெரியாமல் இருப்பது, மத்திய சிறையில், ஹெலிகாப்டர் மூலம் குண்டர்களின் தலைவன் இறங்கி நாயகனை கொல்ல வருவது என, தர்க்க ரீதியாக வரிசை கட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் இயக்குநர் கவனம் செலுத்தவில்லை. மாறாக, பயங்கரமான தாதாக்களை, நாயகன் எவ்வாறு கணக்கை முடிக்கிறார் என்பதை சித்தரிக்கும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் கதாபாத்திரங்களின் உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

‘கேஜிஎஃப்’ போன்ற காட்சி அமைப்புகளை, கதாபாத்திர ஒற்றுமைகளை கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பு, படம் முழுவதும் நிறைந்திருப்பது பலவீனம். வசனங்கள் வழியாக ‘பில்ட் அப்’ செய்யப்படும் ‘கேஜிஎஃப்’ உத்தியையும் தவிர்த்திருக்கலாம். காதலியின் தந்தையாலேயே ஆயுதமாக்கப்படும் நாயகனின் கதையில் கணக்கற்ற வில்லன்களை நுழைத்ததால், வில்லன்களுக்கான பின்னணியையும் சரிவர சொல்லமுடியாமல் போய்விடுவது, நாயகனின் ஹீரோயிசத்தை ‘சின்னப்புள்ள தன’மாக எண்ண வைக்கிறது.

காதை கிழிக்கும் பின்னணி இசை, மோசமான படத்தொகுப்பு இரண்டும், பெரும் உழைப்பை கொடுத்திருக்கும் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் பங்களிப்பை பின்னுக்கு தள்ளுகின்றன.

உபேந்திராவின் தோற்றமும், உயரமும் ஆர்கா கதாபாத்திரத்தில் அவரை கம்பீரமாக வலம் வரச் செய்கின்றன. ஆர்காவின் கதையை சொல்லும் காவல் அதிகாரி சுதீப், மதுமதியாக வரும் ஸ்ரேயா ஆகியோர் அவரவர் பகுதியை சிறப்பாக செய்கின்றனர்.

சுதந்திரப் போராட்ட காலகட்டம் என்கிற உண்மையின் பூச்சு, முன்கதைக்கு தேவைப்படும்போது, நாயகன் - வில்லன்களின் உலகை ஓர் உடோபியா பின்னணியில் சித்தரிக்காமல், தொழிலாளர்களை ஐரோப்பாவுக்கு கொத்தடிமைகளாக கடத்தியதை ஊறுகாய்போல காட்டியதற்கு பதிலாக, அதையே களமாக விரித்திருந்தால் ‘கப்ஜா’வின் ஆக்‌ஷன்கேன்வாஷ் இன்னும் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கும். அதில் கோட்டைவிட்டதால், கன்னட ‘டெம்பிளேட்’ ஆக்‌ஷன் வரிசையில் ஒன்றாகிவிட்டது படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x