Published : 12 Mar 2023 03:18 PM
Last Updated : 12 Mar 2023 03:18 PM
“கண்ணை நம்பாதே படம் தொடங்கும்போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைத்து பார்க்கவில்லை” என நடிகர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மூலம் அடையாளம் பெற்ற இயக்குநர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படம் மார்ச் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் உதயநிதி, “என்னுடைய கேரியரிலேயே 4 அரை ஆண்டுகாலம் எடுத்த படம் என்றால் அது இந்தப்படம் தான். 2018-ம் ஆண்டு இறுதியில் படம் தொடங்கியது. அருள்நிதி தான் எனக்கு இந்தபடத்தை பரிந்துரை செய்தார். க்ரைம் த்ரில்லர் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கேற்றபடி ஒரு கதையை இயக்குநர் மாறன் கூறினார்.
பின்னர் படத்தை தொடங்கினோம். படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. படத்தில் ஒரே பாடல்தான் இடம்பெற்றுள்ளது. படம் முழுக்க இரவு தான் நடக்கும். இடையில் கரோனா வந்துவிட்டது. அதனால் படம் வெளிவர காலதாமதமாகிவிட்டது. நான் ரெட் ஜெயன்டிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டேன். அதை செண்பகமூர்த்தியும், அர்ஜூனும் பார்த்துகொள்கின்றனர். என்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. இந்தப்படம் தொடங்கும் போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது எனக்கு தெரியாது.
இன்றைக்கு அமைச்சராகிவிட்டேன். இந்தப்படத்தின் முதல் ஷெட்யூல் வரும்போது பொண்ணு பார்த்தார்கள். இரண்டாவது ஷெட்யூல் கல்யாணம் ஆகிவிட்டது. மூன்றாவது, நான்காவது ஷெட்யூலில் குழந்தை பிறந்துவிட்டது என நடிகர் சதீஷ் கூறுவார். அப்படி இந்தப்படம் உருவானது. நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் பெரியாளாகியிருக்கிறேன்.
ஆத்மிகா 12ம் வகுப்பு படிக்கும்போது படத்தில் இணைந்தார். தற்போது அவர் கல்லூரி படிப்பையே முடித்து விட்டார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT