Published : 10 Mar 2023 07:38 PM
Last Updated : 10 Mar 2023 07:38 PM
‘அயோத்தி’ பட கதை விவகாரத்தில் எழுத்தாளர் மாதவராஜின் கோரிக்கையை படக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம் கதை விவகாரம் தற்போது சுமுகத் தீர்வை எட்டியுள்ளது.
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி’. இப்படத்தின் கதையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதினார் என அவரது பெயர் படத்தின் டைட்டில் கார்டில் போடப்பட்டது. ஆனால், ‘தீராத பக்கங்கள்’ என்னும் தன்னுடைய வலைதளத்தில் 2011-இல் கதை வடிவத்தில் தான் எழுதிய உண்மைச் சம்பவத்தின் பதிவே ‘அயோத்தி’ படத்தின் கதை என்று எழுத்தாளர் மாதவராஜ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்
இந்த விவகாரம் தற்போது சுமூக முடிவை எட்டியுள்ளது. இது தொடர்பாக எழுத்தாளர் மாதவராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்தது: “நேற்று அயோத்தி படத்தின் இயக்குநர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னையில், சாஸ்திரி பவனில் , டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாக தெரிவித்தேன்.
இன்று காலை என்னை படக்குழுவின் சார்பில் தொடர்பு கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் மந்திரமூர்த்தி, துணை இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த - எங்கள் வங்கியில் பணிபுரிந்த - தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த - தோழர் விஸ்வநாதன் இருந்தார். நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.
இந்தப் படத்திற்காக கடும் உழைப்பை செலுத்தியதை, களப்பணி ஆற்றியதை இயக்குனர் மந்திரமூர்த்தி விவரித்தார். இயக்குநர் மந்திரமூர்த்தியிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிக்கையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பது தெரிய வந்தது.
அயோத்தி படம் OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில் பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கையளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குனர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். இந்த பிரச்சினையில் ஆதரவளித்த, துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி. பார்ப்போம். நம்பிக்கைகள் நனவாக வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT