Published : 09 Mar 2023 03:35 PM
Last Updated : 09 Mar 2023 03:35 PM

“பிரியமான இசைக் கலைஞர்” - கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

“எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞர் சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு துயருற்றேன்” என இசைக் கலைஞர் சந்திரசேகர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞர் சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு துயருற்றேன். அவர் என்னுடன் இருந்த புருஷோத்தமனின் சகோதரர். நாங்களெல்லாம் ஒரே நேரத்தில் மேடையிலிருந்து திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள். நிறைய பாடல்களில் அவர் கிட்டார் வாசித்திருக்கிறார். அவரின் இசை இன்னும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர்: 1982-ம் ஆண்டு வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் ஹிட்டடித்த ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலுக்கு கிட்டார் வாசித்தவர் கிட்டாரிஸ்ட் சந்திரசேகர். அந்தப் பாடலுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் கிட்டாரிஸ்டாக பணியாற்றியவர் சந்திரசேகர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் அங்கம் வகித்த சந்திரசேகர், அதற்கு முன்பாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் சங்கர் - கணேஷ், இசையமைப்பாளர் திவாகர் ஆகியோரிடம் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

இவருடன் இவரின் தம்பியும், 2020-ஆம் ஆண்டு மறைந்த பிரபல டிரம்மர் இசைக் கலைஞருமான புருஷோத்தமனும் பணியாற்றி வந்தார். இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி இணைந்து நடித்த ‘மூன்று முடிச்சு’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த “வசந்த கால நதிகளிலே” பாடலில் மௌத் ஆர்கன் வாசித்தவர் சந்திரசேகர்.

தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். ஆர்.டி. பர்மன், லகஷ்மிகாந்த் - பியாரேலால் மற்றும் பப்பி லஹிரி ஆகியோரின் விருப்பத்துக்குரிய இசைக்கலைஞர் சந்திரசேகர். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் வயது 79. அவரது மறைவுக்கு இசையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x