Published : 09 Mar 2023 04:06 PM
Last Updated : 09 Mar 2023 04:06 PM
“'வடசென்னை'யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் 'விடுதலை' படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத புதிய களத்தில் நிகழும் கதையை மையமாக கொண்டது. வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வகையான திரைக்கதை பாணியைக் கொண்டது. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்... வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்" என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, "எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஓர் உருவமாக இருப்பது மகிழ்ச்சி. கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன்.
அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்தக் கதை குறித்து சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீட் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார். நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன். பிறகு 'வட சென்னை', 'அசுரன்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குள் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி" என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் 'வட சென்னை'யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் 'விடுதலை' படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றிமாறனுடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது முக்கியமானதாக பார்க்கிறேன். இளையராஜாவின் இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள். நன்றி".
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT