Last Updated : 24 Sep, 2017 04:27 PM

 

Published : 24 Sep 2017 04:27 PM
Last Updated : 24 Sep 2017 04:27 PM

4 மொழிகளில் தயாரிப்பு, ஒரே நாளில் வெளியீடு: பாரிஸ் பாரிஸ் படக்குழு முடிவு

'குயின்' ரீமேக்கை ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாரித்து, ஒரே நாளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

நீண்ட நாட்களாக தமிழில் 'குயின்' ரீமேக் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனத்தை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கிறார். 'பாரிஸ் பாரிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மனு குமரன் மற்றும் மனோஜ் கேசவன் தயாரிக்கவுள்ளார்கள்.

தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். இந்தியில் 'குயின்' படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதி இசையமைக்கவுள்ளார். விரைவில் தெலுங்கு மற்றும் மலையாளம் ரீமேக்கை யார் இயக்கவுள்ளார்கள் என்பதை அறிவிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் 4 மொழிகளிலும் தயாரித்து, ஒரே நாளில் 4 மொழிகளிலும் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் படப்பிடிப்பு விருதுநகர், பாரிஸ், லண்டன் உள்ளிட இடங்களில் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கி ஜனவரியில் முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுயஅடையாளத்தை எப்படி கண்டுகொள்கிறாள் என்பதே 'குயின்' கதைக்கருவாகும்.

ரூ.12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான "குயின்", வசூலில் ரூ.97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x