Published : 07 Mar 2023 06:50 AM
Last Updated : 07 Mar 2023 06:50 AM

‘நல்ல கதை மக்களிடம் சேரும்னு தெரியும்’ - ‘அயோத்தி’ இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்தி

சசிகுமார் மற்றும் மந்திரமூர்த்தி

எந்தவித பரபரப்பான புரமோஷனும் இல்லாமல், அமைதியாக ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது, சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும், ‘அயோத்தி’. காரணம் மனிதத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தியிருக்கும் அதன் கதையும் ஆழமானத் திரைக்கதையும். படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்தியிடம் பேசினோம்.

‘அயோத்தி’க்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதிர்பார்த்தீர்களா?

நல்ல கதையை நம்பி படம் எடுத்தா, அது மக்கள்ட்ட சேரும்னு எனக்குத் தெரியும். எமோஷனலான ஒரு படம் பண்ணணும்னு நினைச்சேன். இந்தக் கதையில அக்கா -தம்பி, அப்பா- மகள், அம்மா -மகள், கணவன் - மனைவி எல்லோருக்குமான எமோஷனல் காட்சிகள் இருக்கு. அதனால இது வரவேற்பைப் பெறும்னு நினைச்சேன். அது நடந்திருக்கு. இப்ப மகிழ்ச்சியாக இருக்கு.

எஸ்.ராமகிருஷ்ணன் கதையை எப்படி தேர்வு பண்ணுனீங்க?

நான் எழுதின கதைகளுக்கு, பெரிய பட்ஜெட் தேவைப்பட்டுச்சு. ஒரு முதல் பட இயக்குநரை நம்பி, யாரும் பெரிய பட்ஜெட் படம் தரமாட்டாங்க. ரொம்ப தயங்குவாங்கன்னு நினைச்சேன். அதனால, முதல்ல ஒரு மீடியம் பட்ஜெட் படம் பண்ண அதுக்கான கதையை தேடினேன். அப்ப எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்திச்சு கதை கேட்டேன். நிறைய கதைகள் சொன்னார். இந்தக் கதைப் பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு திரைக்கதைக்காக நிறைய ஆய்வு பண்ணினேன். மதுரைக்குப் போனேன்.

அங்க அரசு மருத்துவமனைக்கு வெளிய நிற்கிற ஆம்புலன்ஸோட அந்தப்பகுதியை போட்டோ எடுத்துட்டு வந்தேன். அந்த ஆம்புலன்ஸ்ல இருக்கிற நம்பருக்கு போன் பண்ணி விசாரிச்சேன். அப்ப நேதாஜி ஹரிகிருஷ்ணன் என்பவர் சரியா பதிலளிச்சார். பிறகு அவரைச் சந்திச்சேன். அவர் வெளிமாநிலத்துல இருந்து இங்க வந்து திடீர்னு இறந்துபோன சுமார், மூவாயிரம் நாலாயிரம் பேரை, அதுக்கான ஏற்பாடுகள் பண்ணி விமானத்துல அனுப்பி வச்சிருக்கேன்னு சொன்னார். அவர் சொன்ன தகவல்கள் இந்தக் கதைக்கு வேற ‘டீட்டெய்ல்’ கொடுத்தது. அதனாலதான் உண்மைக்கு நெருக்கமா இந்தப் படம் உருவானது.

இந்தி நடிகர் யஷ்பால் சர்மாவை நடிக்க வச்சிருக்கீங்க... அவர்தான் வேணும்னு முடிவு பண்ணுனீங்களா?

இங்க இருக்கிற நடிகர்களை நடிக்க வச்சிருக்கலாம். ஆனா, கதை அயோத்தியில நடக்குது. இந்தி நடிகர்கள் நடிச்சா இன்னும் நம்பும்படியா இருக்கும்னு நினைச்சேன். அதனால, வட இந்திய குடும்பமா நான் காண்பிச்சிருக்கிற 4 பேருமே இங்க அறிமுகமில்லாதவங்களையா பார்த்து நடிக்க வைச்சேன். அப்படித்தான் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா வந்தார். ஹீரோயினா நடிச்சிருக்கிற பிரீத்தி அஸ்ரானி, அம்மாவா நடிச்ச அஞ்சு அஸ்ரானி, தம்பியா நடிச்சிக்கிற அத்வைத் எல்லாருமே தமிழ்ல அதிகம் தெரியாதவங்க. அவங்க ரொம்ப சிறப்பாவும் நடிச்சாங்க.

படத்துல வர்றது அயோத்தி ‘ஸ்லாங்’காமே?

ஆமா. வட இந்தியாவுல ஒவ்வொரு பகுதியில ஒவ்வொரு ‘ஸ்லாங்’ல இந்தி பேசறாங்க. உத்தரபிரதேசத்துலயே பல பகுதிகள்ல வெவ்வேற ஸ்லாங் இருக்கு. அதனால, கதை நடக்கிற
அயோத்தி ‘ஸ்லாங்கை’ பயன்படுத்தினா நல்லாயிருக்கும்னு நினைச்சுப் பண்ணினோம். உத்தரபிர தேசத்தைச் சேர்ந்த ஒரு உதவி இயக்குநர் கூடவே இருந்தார்.

அடுத்து என்ன படம்?

இன்னும் முடிவு பண்ணலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x