Published : 03 Mar 2023 02:33 PM
Last Updated : 03 Mar 2023 02:33 PM
பாலியல் வன்கொடுமை புரியும் கொடூரர்களிடம் சிக்கிய பெண்ணின் மனப் போராட்டங்களும் பாதிப்புகளும்தான் ‘இன் கார்’ (In Car) படத்தின் ஒன்லைன்.
ஹரியாணாவின் காலைப்பொழுதில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண் ஒருவர் 3 ஆண்கள் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்படுகிறார். அந்தப் பெண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தங்களின் இடத்திற்கு கடத்திச் சென்று, பாலியல் இச்சைகளை தீர்த்துகொள்ள அக்கும்பல் திட்டமிடுகிறது. இதனிடையே, காரில் கடத்தப்படும் அப்பெண் அங்கிருந்து தப்பித்தாரா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் பட்டியலில் மற்றொரு பெயராக இணைந்தாரா? - இதை அப்பெண்ணின் அகவெளிப் போராட்டங்கள் மூலம் சீட் எட்ஜ் த்ரில்லர் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘இன்கார்’. இந்தியில் உருவாகியிருக்கும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியான நிலையில் தமிழில் காணக்கிடைக்கிறது.
ஆண்கள் சூழ்ந்த கார் ஒன்றில் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட உள்ள பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட இடத்துக்குள் பார்வையாளர்களை பொருத்தி அதன் உணர்வை பதைபதைப்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஹர்ஷ வர்தன். காருக்குள் நிகழும் கதையில் கடத்தல்காரர்களுடன் ஒருவராக நம்மையும் அழைத்துச் செல்வதும், அந்த பதற்றத்தை கச்சிதமாக கடத்தியதும் படத்தின் பெரிய பலம்.
பிரதான கதைக்கருவைச் சுற்றி கோர்க்கப்பட்டிருக்கும் சமூக யதார்த்ததை பிரதிபலிக்கும் காட்சிகள் மறுதலிக்க இடமின்றி ஒப்புக்கொள்ள வைக்கின்றன. உதாரணமாக பட்டப்பகலில் பொதுவெளியில் பெண் ஒருவர் கடத்தப்படும்போது சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் அச்சம்பவத்தை அமைதியாக கடப்பது, அங்கிருக்கும் பெண் போலீஸ் சம்பவத்தை கண்டும் காணாமலிருப்பது, காருக்குள்ளிருக்கும் போலீஸ்காரர் எதிர்வினையாற்றாமல் குற்றவாளிகளுடன் பயணிப்பது என சமூக அவலத்தை காட்சிப்படுத்துவதில் சமரசம் கொள்ளவில்லை.
‘உங்க தங்கச்சிக்கு இப்டி நடந்தா சும்மா இருப்பீங்களா?’ என பாலியல் வன்கொடுமையாளர்களிடம் ரித்திகா சிங் கேட்கும் காட்சியில், ‘என் தங்கச்சிய யாராச்சும் இப்டி பண்ணா சும்மா விட்ருக்கமாட்டேன்’ என குற்றவாளி கும்பல் பொங்கும் இடத்தில் தன் வீட்டு பெண்ணை மட்டும் பாதுகாக்கும் மனநிலையும், ஆன்மிகப் பற்றுள்ள குற்றவாளிகளிடம், ‘கடவுள் நம்பிக்க வைச்சிருக்கீங்க அப்புறம் ஏன் இப்டி பண்றீங்க?’ எனும்போது கடத்தல்காரர்களில் ஒருவர், ‘நீ எந்த ஊரு அம்மன்?’ என்ற வசனத்தின் வழியே பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்படும் சமூகத்தில் பெண்களுக்கான நிலையை வெளிக்காட்டியிருக்கும் இடங்கள் அழுத்தம்.
பாலியல் இச்சையை கட்டுப்படுத்த முடியாத ஒருவன், ரித்திகா சிங்கிடம், ‘உங்க வீட்ல யூரின் அடக்கி வைக்க சொல்லித் தரலையா?’ என கேட்பது... இப்படி படம் நெடுங்கிலும் இழையோடும் முரண்கள் காட்சிகளின் தரத்தை கூட்டுகின்றன. தொடக்கத்தில் பொறுமையாக நகரும் படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு பார்வையாளர்களை தொடர்ந்து பதற்றத்துடனும், பயத்துடனும் தக்கவைத்துக்கொள்கிறது.
காருக்குள் சிக்கி தவிக்கும் பெண்ணாக, அழுகை, வலி, பயம், பதற்றத்தை கச்சிதமாகவும், அழுத்தமாகவும் கடத்தியிருக்கும் விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் ‘தேசிய விருது’ நாயகி ரித்திகா சிங். இயலாமையின் உச்சத்தில் உடைந்து அழும் இறுதிக்காட்சியில், பொங்கி எழும் ஆக்ரோஷத்தருணங்களிலும், க்ளோஷப் ஷாட்களிலும் ரித்திகாவின் நடிப்பும் மெச்சத்தக்கது.
நெளியும் உடல்மொழியிலும், அடுக்கும் குற்றங்களினாலும் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு வெறுப்பூட்டும் கதாபாத்திரத்தில் மணிஷ் ஜஹன் ஜோலியாவின் (Manish Jhanjholia) நடிப்பு அபாரம். சந்தீப் கோயத் (Sandeep Goyat), சுனில் சோனி, க்யான் பிரகாஷ் நடிப்பு மொத்த படத்துக்குமான எரிபொருள்.
5 கதாபாத்திரங்கள், ஒரு கார் என குறைந்த பட்ஜெட்டில் திரைக்கதையை மட்டுமே அதிக அளவில் முதலீடாக்கி பயணத்தின் வழியே நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் காட்சியப்படுத்தியிருக்கும் விதம் படத்தை அயர்ச்சியில்லாமல் நகர்த்துகிறது. அதற்கு முக்கிய காரணம், மிதும் கங்கோபாத்யாவின் பரந்து விரிந்த டாப் மற்றும் வொயிட் ஆங்கிள் ஷாட்ஸ்களும், காருக்குள் வைக்கப்பட்ட கச்சிதமான கோணங்களும் தான். மத்தியாஸ் டுப்ளெஸி பின்னணி இசை தேவையான இடங்களில் பயத்தையும், பரபரப்பையும் கூட்டியும் குறைத்தும் தக்க உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்த உதவியிருக்கிறது.
முக்கியமான பிரச்சினையை கையிலெடுத்திருக்கும் படம், மறைமுகத் தீர்வாக முன்வைக்கும் அம்சம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸ் வழக்கமான சினிமாத்தனத்துடன், கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளும் ரித்திகா சிங்கைப் போல சிக்கித் தவிப்பது டெம்ப்ளேட் ரகம். மலிந்திருக்கும் தர்க்கப் பிழைகள் ஒருபுறமும், அழுத்தமில்லாத இறுதிக்காட்சி மறுபுறமும் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிச்சமிட்டு காட்டியிருக்கும் இந்த காரில் நுனியில் பயத்துடன் பயணிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT