Published : 28 Feb 2023 08:14 PM
Last Updated : 28 Feb 2023 08:14 PM
சென்னை: நடிகர் யோகிபாபு நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் என்னை அணுகி, நடிகர் யோகி பாபு, மிர்ச்சி சிவா, நடிகை ப்ரியா ஆனந்த், ஆகியோர் நடிக்கும் 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தை எடுக்க ரூபாய் 1 கோடியே 75லட்சம் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி திரைபடத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாக ராஜ்மோகன் உறுதியளித்தார். இதன் அடிப்படையில், 1 கோடியே 75 லட்சம் ரூபாயை பல்வேறு தவணைகளில் வழங்கினேன். இந்த ஒப்பந்த விதிகளை மீறி படத்தை ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதனால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும். எனவே, தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல், 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட இடைகாலத் தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரருக்கு ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியத் தொகையை கொடுக்கும் வரை இப்படத்தை ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம்" என்று உத்தரவாதம் அளித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT