Published : 26 Feb 2023 03:21 PM
Last Updated : 26 Feb 2023 03:21 PM

“திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவியுங்கள்” - ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள்‌ வழங்குகின்ற திட்டத்தை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ வருகின்ற நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்‌ அறிவிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திரைப்படத்துறையில்‌ தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத்‌ தயாரிப்பாளர்களிடமும்‌, சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும்‌ கலந்துபேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள்‌ விடுத்தோ எங்கள்‌ சம்பளத்தை ஓரளவு உயர்த்‌தி வருகிறோம்‌.

திரைப்படத்‌ துறையில்‌ சாதாரண தொழிலாளர்கள்‌ சம்பளம்‌ இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள்‌ கடக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திரைப்படத்‌ துறைக்கு செய்யும்‌ உதவிகள்‌ மேலோட்டமாகவே நின்று விடுகின்றன. அஸ்திவாரமான தொழிலாளர்களை அவை சென்றடைவதில்லை. இதுவரை திரைப்படத்துறையில்‌ பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்‌ உயிரிழந்திருக்கிறார்கள்‌. அவர்கள்‌ குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும்‌ இல்லை. ரஜினி, கமல்‌ போன்ற உச்ச நட்சத்திரங்களின்‌ படங்களில்‌ பணிபுரியும்போது இறந்தால்‌ மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது.

ஆனால்‌ சிரமப்பட்டு திரைப்படம்‌ தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின்‌ படங்களில்‌ பணிபுரியும்போது விபத்து ஏறபட்டால்‌ அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை. எனவே . திரைப்படத்துறையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்‌. வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில்‌ திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள்‌ வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x