Published : 26 Feb 2023 01:38 PM
Last Updated : 26 Feb 2023 01:38 PM

‘‘இன் கார்” பட கதாபாத்திரத்திலிருந்து மீள முடியவில்லை: ரித்திகா சிங்

"இன் கார்" படத்தில் நடித்து முடித்துவிட்ட போதிலும், அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவரது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை வெளியிடுகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஹர்ஷ் வர்தன், “"இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும், இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே "இன் கார்"” என்றார்.

நடிகை ரித்திகா சிங் பேசுகையில், “"இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x