Last Updated : 25 Feb, 2023 10:20 AM

 

Published : 25 Feb 2023 10:20 AM
Last Updated : 25 Feb 2023 10:20 AM

தக்ஸ் Review: சிறைச் சுவர்களுக்குள் களமாடும் கதையில் சுவாரஸ்யம் கிட்டியதா?

பல்வேறு காரணங்களுக்காக சிறைக் கூண்டில் அடைப்பட்டவர்கள், கூண்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்று தீட்டும் திட்டம் கைகூடியதா என்பது ‘தக்ஸ்’ படத்தின் ஒன்லைன்.

நாகர்கோவிலின் சிறைச்சாலை அது. பணத்தை திருடியதாக கூறி சேது (ஹிருது ஹாரூன்) காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியானதொரு தருணத்திற்காக காத்திருந்த சிறைவாசிகள் சிலர் காவல் துறையை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயலும்போது, குறுக்கே சேது நுழைந்து அவர்களின் திட்டத்தில் தீயிட்டுவிடுகிறார்.

காவல் துறையிடம் நன்மதிப்பும், சிறைவாசிகளிடம் கோபமும் பரிசாக கிடைக்க, சிறைவாசத்தில் நாட்கள் கழிகின்றன. சிறையிலுள்ள தனது அறை நண்பர் துரை (பாபி சிம்ஹா)யின் பிரச்சினையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், காவல் துறையினரின் நன்மதிப்பை பயன்படுத்திக்கொண்டும், சிறையிலிருந்து தப்பிச்செல்ல புது திட்டம் திட்டுகிறான் சேது. இறுதியில் அவரது திட்டம் நிறைவேறியதா? இல்லையா? சேதுவுக்கும், துரைக்குமான பின்புல கதைகள் என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

சிறையிலிருந்து தப்பிச் செல்லும் வகையறாக் கதைகள் ஹாலிவுட்டுக்கு பழக்கமென்றாலும், தமிழுக்கு இது புது வரவு. மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’ (Swathanthryam Ardharathriyil) படத்தின் தழுவலாக படம் இருந்தாலும் சில மாற்றங்களை அரங்கேற்றி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிருந்தா. சிறைச்சாலையை களமாக்கி அதிலிருந்து வெளியேறும் திட்டத்தை படமாக்கியிருக்கும் விதத்தில் திரைக்கதை சுவாரஸ்யம் கூட்டுகிறது. சிறைச்சாலைக்கான கலை ஆக்கம் யதார்த்ததுடன் கூடிய நேர்த்தி.

படத்தின் ஆகச்சிறந்த பலம் அதன் மேக்கிங். சிறைச்சாலையின் அந்த நான்கு அறைகளுக்குள்ளாக அங்கிருக்கும் லைட்டிங்குகளை பயன்படுத்தி காட்சிகளை ரம்மியமாக்கியிருக்கிறது பிரியேஷ் குருசாமியின் லென்ஸ். பரபரப்பு பசிக்கு தேவைப்படும் தீனியை ஃபுல் மீல்ஸ் ஆக கொடுத்து பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சாம்.சி.எஸ். உண்மையில் த்ரில்லர் ஜானர்கள் சாமுக்கான குலாம்ஜாமுன்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல பிரவீன் ஆண்டனியின் கட்ஸ்கள் கச்சிதம். குறிப்பாக இறுதிக் காட்சி ஈர்ப்பு.

தேர்ந்த நடிப்பால் கவனம் பெறும் ஹ்ரிது ஹாரூன் தனது கதாபாத்திரத்திற்கான மீட்டரில் கச்சிமாக பொருந்திப் போகிறார். பாபி சிம்ஹா கோபப்படும் காட்சி ஒன்றில் அவரது கன்னம் தனியே நடிக்கிறது. அப்படியான நடிகர் முதன்மை கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவமில்லாத கதாபாத்திரத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்.

கறார் காக்கிச்சட்டை அதிகாரியாக ஆர்.கே.சுரேஷ் வழக்கமான தனது முரட்டுத்தனமான நடிப்பை பதியவைக்கிறார். ஆனால் அந்த முரட்டுத்தனம் அவரது கதாபாத்திரத்திற்கான எழுத்துடன் முழுமையாக ஒன்றவில்லை என தோன்றுகிறது. காரணம், கறார் அதிகாரியான அவரை சிறையிலிருப்பவர்கள் அசால்டாக அடிக்கப் பாய்வது, அப்படியான குற்றவாளிகளுக்கு அவர் ஆற்றும் பலவீனமான எதிர்வினை, இறுதிக்காட்சியில் துப்பாக்கியிருந்தும் வேடிக்கைப் பார்த்து நின்றுகொண்டிருப்பது என நடிப்பிலிருக்கும் முரட்டுத்தனம் கதாபாத்திரத்தில் மிஸ்ஸிங்!

எந்தவித முக்கியத்துவமுமில்லாத வெறும் காதல், ரொமான்ஸ், காட்சிகளுக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கும் அனஸ்வரா ராஜன் கதாபாத்திரம் வெறும் பொம்மையாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிருந்தா இயக்கியிருக்கும் படத்தில் பெண் கதாபாத்திரம் மிகவும் பலவீனமாக எழுத்தபட்டு ரொமான்ஸுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பது முரண். வாய் பேச முடியாதவர் என்பதால் சிங்கிள் வசனம் கூட அவருக்கு வாய்க்கவில்லை.

சண்டைக் காட்சிகளெல்லாம் கொடுத்து முனிஷ்காந்த் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டிருக்கிறது. நகைச்சுவை கதாபாத்திர சாயலிருந்து விலகியதொரு கதாபாத்திரத்தில் ஈர்க்கிறார்.

படத்தின் தொடக்கத்தில் வரும் மழைச் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து சிறைச் சுவர்களுக்குள் சுழலும் கேமரா அங்கு நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து சுவாரஸ்யத்துடன் பதிவு செய்கிறது. தொடர்ந்து வரும் காதல் காட்சிகளும், அதற்கான பாடலும் அயற்சி. இயக்குநர் கடத்த நினைக்கும் உணர்வெழுச்சி பார்வையாளர்களிடம் போதுமான அளவில் கடத்தப்படாதது ஆகப் பெரும் சிக்கல்.

முதன்மை கதாபாத்திரத்திற்கான பின்புலக் கதை அத்தனை அழுத்தமாக இல்லாததால் அவர் சிறையிலிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் பார்வையாளர்களுக்கு எழவில்லை. அதற்காக, அவர் தீட்டும் திட்டமும் பெரிய அளவில் பாதிப்பதில்லை.

பிரதான கதாபாத்திரங்களுக்கான பிரச்சினைகள் போகிறபோக்கில் பதிவு செய்யும் படம். அவர்கள் சிறையிலிருந்து தப்பிக்கும் திட்டங்களில் மட்டுமே அதீத கவனம் செலுத்தியதால் எமோஷனல் கனெக்ட் இல்லாமல் ‘ப்ரீசன் ப்ரேக்’ என்ற அளவில் மட்டும் எஞ்சுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x