Published : 24 Feb 2023 04:17 PM
Last Updated : 24 Feb 2023 04:17 PM
காதலி இல்லாமல் கஷ்டப்படும் சிங்கிள்ஸுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஸ்மார்ட்போனுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
மொரட்டு சிங்கிள் இளைஞர்களின் கவலையை போக்க விஞ்ஞானி ஒருவர் மனிதர்களிடையே பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்போன் ஒன்றை உருவாக்குகிறார். அந்த ஸ்மார்ட்போனை சந்தையில் பல கோடிக்களுக்கு விற்று பணம் பார்க்க வேண்டும் என தொழிலதிபர் பகவதி பெருமாள் ஆசைப்பட, அது திருடர்களால் களவாடப்படுகிறது. இறுதியில், அந்த ஸ்மார்ட் போன் சிம்ரன் உணவு டெலிவரி வேலை பார்க்கும் சிவாவின் கைகளில் சிக்கி, அவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. ஒருகட்டத்தில் ஸ்மார்ட்போன் சிம்ரனுக்கு சிவாவின் மீது காதல் வர, அதை அவர் ஏற்றாரா? மறுத்தாரா? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? - இதுதான் திரைக்கதை.
பெரிய அளவில் சுவாரஸ்யம், திருப்பங்களின்றி முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி நகரும் படத்தில், ப்ரேமம் பட ரெஃபரன்ஸ், மனோவின் பாதிரியார் வேடம், கேதர் ஜாதவ் ஐபிஎல் ஆட்டம், காரில் உணவு டெலிவரி செய்வது, அயன் மேனிடம் பஞ்ச் டயலாக் பேசுவது என காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ‘லாஜிக் பார்க்க வேண்டாம்’ என முன்கூட்டியே எச்சரித்து விடுவதால் மலிந்து கிடக்கும் லாஜிக் மீறல்களைக் கடந்து படத்தின் ஒன்லைனர்கள் சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகின்றன.
‘அகில இந்திய சூப்பர் ஸ்டார்’ சிவாவுக்கு இயல்பாகவே வரும் டைமிங் காமெடிகளும், உடல்மொழியும் மொத்த படத்தையும் ரசிக்க பேருதவி புரிகின்றன. இடையிடையே அவரின் ஆங்கில வசனங்கள் அல்டிமேட் ரகம்!
‘பர்ஸ்ட் டைம் கிறிஸ்டினா மாறுனதால இதெல்லாம் தேவைன்னு நெனைச்சேம்பா’ என மனோ பேசும் வசனங்களும், அவரின் யுத் உடல்மொழியும் டைமிங் டையலாக்குகளும் ‘சிங்காரவேலன்’ மனோவை நினைவூட்டுகின்றன. நகைச்சுவை மெட்டீரியலாக அவரை தமிழ் சினிமா நிறைய பயன்படுத்த வேண்டியிருப்பதை உணர்த்தியிருக்கிறார். மேகா ஆகாஷ் ‘க்யூட்’ முகபாவனைகளால் முழுக்க க்ரீன்மேட்டிலேயே நடித்து கொடுத்திருக்கிறார். அஞ்சு குரியன் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளார். மாகாபா ஆனந்த், கேபிஒய் பாலா, சாரா, பகவதி பெருமாள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஸ்மார்போன் சென்யோரிட்டா’ பாடல் படம் முடிந்த பின்பும் முணுமுணுக்க வைக்கிறது. அவரின் பின்னணி இசை கதைக்களத்திற்கு தேவையான மூட்-ஐ சிறப்பாகவே உருவாக்கி தருகின்றன. ஆர்தர் ஏ வில்சனின் கேமரா தன்னைச் சுற்றியிருக்கும் ஒளியை உள்வாங்கி பிம்பங்களை பிரசவித்திருக்கிறது. மோசமில்லாத கிராஃபிக்ஸ் காட்சிகள் பட்ஜெட்டை நினைவூட்டுகின்றன.
‘எந்திரன்’ படத்தின் ஸ்பூஃப் வெர்ஷனைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் படத்தின் சில இடங்கள் அயற்சி கொடுக்காமலில்லை. படத்தில் அடுத்த காமெடி எப்போ சார் வரும் என காத்திருக்க வேண்டியுள்ளது. காரணம், படத்தில் அதைத் தாண்டி எதுவுமில்லை என்பதால் நகைச்சுவையை எதிர்நோக்கியிருக்கும் தருணங்களில் சில இடங்களில் உருவக் கேலி வசனங்கள் நெருடல். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்களை மேலோட்டமாக தொட்டிருக்கும் இப்படம் நகைச்சுவை என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி நீளாதது ஒரு ஒட்டுமொத்த காமெடி ட்ராமா என்ற ரீதியில் சுருங்கிவிடுகிறது.
மொத்தத்தில் சுவாரஸ்யத்தையும், திருப்பத்தையும் எதிர்பாக்காமல், லாஜிக் மீறல்களைத் தாண்டி ஜாலியாக சென்று பார்க்கும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ ஏமாற்ற வாய்ப்பு குறைவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT