Published : 06 Jul 2014 10:55 AM
Last Updated : 06 Jul 2014 10:55 AM

திரை விமர்சனம்: அரிமா நம்பி

மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் ‘அரிமா நம்பி’. குற்றச் செயல் ஒரு தொலைக்காட்சி சேனலின் வீடியோ கேமராவில் பதிவாகிவிடுகிறது. அதை ஒளிபரப்ப விடாமல் தடுப்பதற்காக சேனல் முதலாளியின் பெண்ணைக் கடத்துகிறது அமைச்சரின் அடியாள் குழு. அந்தப் பெண்ணைத் தேடி அவளது காதலன் புறப்படுகிறான். சகல வல்லமை படைத்த அமைச்சரின் முயற்சிகளைத் தனி மனிதனான அவன் எப்படி முறியடிக்கிறான் என்பதே கதை.

புது இயக்குநர் ஆனந்த் சங்கர் சமகாலத் தன்மை கொண்ட ஒரு க்ரைம் கதையை எடுத்துக் கொண்டு அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் படத்தின் வேகம் சீறிப் பாய்கிறது. இரண்டாம் பாதியில் சற்றுத் தொய்வடைந்தாலும் மீண்டும் வேகம் எடுக்கிறது. படம் முழுவதும் இருக்கும் விறுவிறுப்பு முதல் இரு காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை மறக்கச் செய்துவிடுகின்றன.

கதாநாயகன் தன் உடல் பலத்தை மட்டும் நம்பாமல் மூளையையும் நம்பும் விதத்தில் திரைக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. புத்திசாலித் தனத்துடன் நவீன கருவிகளும் தொழில்நுட்பமும் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம்தான் படத்தை வித்தியாசப்படுத்துகிறது.

கடத்தல், தடயம் தெரியாமல் அதை மறைத்தல் ஆகியவை சுவாரஸ்யத்தைக் கூட்டு கின்றன. சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள், காவல்துறை நடவடிக்கைகள் ஆகியவை விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. வங்கிக் கொள்ளை மூலம் நாயகன் செய்யும் தந்திரம், யூ டியூபில் வீடியோவை ஏற்றும் முயற்சி, நண்பனால் ஏற்படும் திருப்பம், போலீஸ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாயகன் போடும் திட்டங்கள் ஆகியவை விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

கிளைமாக்ஸில் வரும் திருப்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. தான் பேசுவதெல்லாம் இனி நேரலை மூலம் மக்களைச் சென்றடையாது என்பது தெரிந்ததும் அமைச்சர் உண்மையைச் சொல்வது சாத்தியம்தான். ஆனால் அத்தனை போலீஸ்காரர்கள், கருப்புப் பூனைப் படையினர் முன்னிலையில் அதைச் செய்வாரா?

போலீஸால் துரத்தப்படும் இளைஞன் மத்திய அமைச்சரைத் தனியாகச் சந்திக்கும் காட்சி திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு உதவியிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமே இல்லை. அமைச்சரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்தகையவை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் வந்து கட்டளைகள் பிறப்பிப்பதும் நெருடல்.

அதிமுக்கியமான ரகசியம் அடங்கிய மெமரி கார்டு கையில் கிடைத்ததும் அதை இன்னொரு பிரதி எடுத்துவைத்துக்கொள்ளவே யாரும் நினைப்பார்கள். புத்திசாலிகளான கதாநாயகனுக்கும் நாயகிக்கும் அது தோன்றாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

பல காட்சிகள் நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளன. அமைச்சரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக கேமரா மொபைல் போனை அவர் எதிரில் வைத்துக் கேள்விகள் கேட்பது, போலீஸை திசை திருப்புவதற்காகச் செய்யும் உத்திகள், தனியார் இணையத் தொடர்பு அறுந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான இணைய வழிகளை மட்டும் பயன்படுத்துதல் எனப் பல காட்சிகள் கவனமாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சில காட்சிகளில் கண்ணில் தெரிவதையே பிறகு வசனத்திலும் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.

கடத்தி வந்த பெண்ணைக் கொல்ல வேண்டிய அடியாள் அப்படிச் செய்வதற்கு முன்பு வல்லுறவு கொள்ள முனைவது அதிர்ச்சியூட்டும் யதார்த்தம்.

சண்டை, ஆக்ரோஷம் எல்லாம் விக்ரம் பிரபுவுக்கு நன்றாக வருகிறது. வசனம் பேசுவதில் சில இடங்களில் தடுமாறுகிறார். காதல் காட்சிகளிலும் இயல்புத்தன்மை குறைகிறது.

பணக்கார வீட்டுப் பெண்ணாக வரும் ப்ரியா ஆனந்த் படத்துக்கு வசீகரம் கூட்டுகிறார். காதல் காட்சிகளிலும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளும்போதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் கண்கள் நன்கு ஒத்துழைக்கின்றன.

ஓரிரு காட்சிகளே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். அமைச்சராக வரும் ஜே.டி.சக்கரவர்த்தியின் கண்கள் வில்லத்தனத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகின்றன. சூது கவ்வும் படத்தில் முரட்டு போலீஸாக வந்த யோக் ஜப்பிக்கு இதிலும் போலீஸ் பாத்திரம்தான். ஆனால் கன்ட்ரோல் அறைக்குள் அடைத்து அவருக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிடுகிறார்கள்.

இசை டிரம்ஸ் சிவமணி. ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவதில் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றன. சேஸிங் காட்சிகளும் பாடல் காட்சிகளும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் சுமார்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x