Last Updated : 14 Feb, 2023 01:12 PM

 

Published : 14 Feb 2023 01:12 PM
Last Updated : 14 Feb 2023 01:12 PM

Valentine's Day ஸ்பெஷல் | தமிழ் சினிமாவின் ‘க்ளாஸிக்’ லவ் புரபோசல்ஸ்!

காதலர் தினத்தன்று பலரும் தங்கள் இணையரிடம் எப்படியெல்லாம் காதலைச் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், காதலை இப்படியெல்லாம் சொல்லலாம் என தமிழ் சினிமா கற்றுக் கொடுத்திருக்கிறது. என்னென்ன வகையில், எப்படியெல்லாம் காதல் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் காணலாம்.

அலையாயுதே: ஷாலினியிடம் தன் காதலைச் சொல்ல தயாராகும் மாதவன், அதற்கான களமாக ரயில்வே ஸ்டேஷனை தேர்ந்தெடுத்திருப்பார். காதலுக்கான களங்கள் பூக்கள் சூழந்த இடமாக்கத்தான் இருக்க வேண்டுமா என்ன? இன்னும் சற்று நேரத்தில் ரயில் புறப்படத் தயாராக இருக்கிறது. நீட்டி முழங்க நேரமில்லை. ‘நறுக்’கென்று தனித்துவமான வசனங்களுடன் சொல்லியாகவேண்டும். அது ஒரு சிறிய சீக்வன்ஸ் காட்சி.

அந்தக் காட்சியில் ஷாலினியின் பெயரையும் தெரிந்துகொண்டு காதலைச் சொல்லவும் வேண்டும் எனும்போது, ஓடி வரும் மாதவன் முதலில் நோட்டை வாங்கி பெயரை படித்துவிட்டு, ‘ஷக்தி... நான் உன்ன விரும்பல. உன் மேல ஆசப்படல. நீ அழகா இருக்கன்னு நெனைக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு’ இவ்வளவுதான் அந்த மொத்த வசனமும். ஆனால், இன்றும் அந்த வசனம் ‘க்ளாஸிக்’ ரகமாக உறைந்து கிடக்கிறது.

வேட்டையாடு விளையாடு: அப்படியான ஒரு ‘நூடுல்ஸ்’ வேக புரபோசலை தமிழ் சினிமா அதுவரை கண்டதில்லை. எடுத்ததும் ‘ஐ லவ் யூ’ என ஆரம்பிப்பார் கமல். கமலினி முகர்ஜினியின் அந்த அதிர்ச்சிக்கு அழகான முகபாவனையையும் நெய்து ஹாரீஸ் அங்கே காதல் தூதுவனாக இசையொன்றை மீட்டிருப்பார். அந்தக் காட்சிக்கான உயிரூட்டம் அது. உடனே கமலினி முகர்ஜி, ‘நம்ம சந்திச்சு 2 ஹவர்ஸ்தான் ஆயிருக்கு அதுக்குள்ள என்ன லவ்’ என கேட்க, ‘டூ மினிட்ஸ்லயே சொல்லியிருப்பேன், நீ தப்பா நெனைக்க போறியேன்னு 2 மணி நேரம் பொறுத்துட்டு இருந்தேன்’ எனக் கூறிவிட்டு ‘நாளைக்கே கல்யாணம் வைச்சிக்கலாம்’ என ஒரு நிமிட புரபோசலில் ஓராயிரம் ரியாக்‌ஷன்களும், பின்னணியில் ஹாரீஸ் இசையும் அமர்களப்படுத்தும்.இருவருக்குமான க்ளோசப் ஷாட்ஸ்கள் மூலம் நம் கண்களை அங்கிருந்து அகலவிடாமல் கட்டுபடுத்தியிருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன்.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு தனித்துவ காதல் சொல்லல் பாணியை தனது படங்களில் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் ‘காக்க காக்க’ படத்தில் ஜோதிகா தனது காதலைச் சொல்லும் வசனங்களில் ஒருவித ஈர்ப்பு தொற்றியிருக்கும். அது வெறும் காதல் சொல்லலாக மட்டும் இல்லாமல் வாழ்க்கை முழுமைக்குமான வசனங்களும் அதில் அடங்கியிருக்கும்.

ஜோதிகா, ‘உங்க கூட வாழ்க்கைய வாழணும். உங்க கூட சிரிச்சுபேசணும்; சண்ட போடணும்; உங்க தோள்ல சாஞ்சு அழணும்; இன்னைக்கு மாதிரி எப்பவும் உங்க மேல பைத்தியமா இருக்கணும்’ என தொடங்கி ‘குழந்தைகள் பெற்றுக்கொள்ளணும்’ என பேசி ‘கடைசில ஒருநாள் செத்துப்போயிடணும்’ என முடிப்பார். தேவையில்லாதது என எதுமின்றி அந்த மொத்தக் காட்சியும் நெருக்கமாக எழுதப்பட்டிருக்கும். பெரிய டெம்ப்ளேட் குதூகலம் ரொமான்டிசைஸ் வசனங்களில்லாமல் நேரடியாக இதான் விஷயம் என சொன்னாலும் அதை சொல்லும் விதம் காட்சிக்கான உணர்வை கடத்தியிருக்கும்.

பருத்தி வீரன்: அந்தக் காட்சியே யுவனின் இசையுடன்தான் தொடங்கும். நெளிந்துகொண்டே முகத்தில் சிரிப்புடன் ‘வேணும்னேவா செய்வாக’ என ஆரம்பிப்பார் கார்த்தி. ‘போதையில கீதையில ஒண்ணும் ஒலர்லையே’ என பிரியாமணி சொல்லும்போது, ‘எல்லா நேரமுமா அப்டியே இருப்பாக, இப்போல்லாம் ரெடியோ லவ் பாட்டா கேக்க தோணுது’ என கூறி அவர் பேசும் கவிதை ட்ரெண்டிங். கார்த்தி நெஞ்சில் பச்சைக் குத்தியதை காட்டிய பிறகு, ‘சாஞ்சிகலாம்ல’ என்று சொல்லும்போதே மற்றொரு லேயரில் பின்னணி இசை ஒலிக்க காதல் பரிமாறப்படும். கிராமத்து வகையறா காதல் கதைகளில் ரசிக்கும்படியாக காதல் சொல்லல் காட்சியை எழுதியிருப்பார் அமீர்.

விண்ணைத்தாண்டி வருவாயா: ‘I Don wanna be your brother jesyy’ இல்லல்ல எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா இருந்தாலும் பரவால்ல. இந்த உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன். உன்ன தவிர’ என சிம்பு பேசி முடித்ததும், ‘ஏன்’ என த்ரிஷா கேட்க, ‘ஏன்னா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு ஐ எம் லவ் வித் யூ ஜெஸ்ஸி’ என கூறியதும் ஒரு பேனிங் ஷாட்டில் மொத்த உணர்வையும் கடத்தியிருப்பார் கௌதம். அதற்கு அந்த ஷாட்டுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் அந்த புரபோசல் காட்சிகளை அழகூட்டியிருக்கும். இன்றும் பேசப்படும் காதல் சொல்லல் காட்சி அது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x