Last Updated : 13 Feb, 2023 06:43 PM

2  

Published : 13 Feb 2023 06:43 PM
Last Updated : 13 Feb 2023 06:43 PM

‘தாயுமானவன்’ முதல் ‘மீட்பர்’ வரை! -  ‘டாடா’ நாயகன் கதாபாத்திரமும் சில கேள்விகளும்

இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி வெளியான ‘டாடா’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. என்கேஜிங் திரை ஆக்கம் படத்திற்கு கைகொடுத்திருப்பதன் பலனாக வெகுஜன மக்களிடம் படம் வரவேற்பை பெற்று கொண்டாடப்படுகிறது. ஆனால், அதேசமயம் படத்தில் இழையோடிக்கொண்டிருக்கும் நுணுக்கமான சில பிரச்சினைகளை அடையாளப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பொதுவாக எதிர்மறை (வில்லன்) கதாபாத்திரத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்து ஹீரோ கதாபாத்திரத்தை புனிதராக காட்டுவது வெகுஜன சினிமாவின் அடிப்படை ஃபார்முலா. அந்த ஃபார்முலாவின் வழியே ‘டாடா’வை அணுகலாம். இங்கே கவின் கதாபாத்திரத்தை புனிதப்படுத்த, அபர்ணா தாஸ் கதாபாத்திரம் வெறுப்புதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. படத்தில் குழந்தையை விட்டுச் செல்வதற்கான காரணம் அபர்ணாவிடம் இருந்தபோதிலும், அதை படம் இறுதியில் மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஆனால், அதற்கு முன்பான ஒட்டுமொத்த திரைக்கதையும் கவின் கதாபாத்திரத்தின் புனிதத் தந்தைக்கான பிம்பத்தை கட்டமைத்து ஆண் பரிவைக் கோர முயல்கிறது.

‘தந்தையானவன் தான் தன் குழந்தையை மீட்டு வளர்ப்பதைப் போலவும், தாயானவள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டது போலவும்’ பிம்பம் ஒட்டுமொத்த படத்திலும் உருவாக்கப்பட்டு, இறுதியில் இரண்டு நிமிட அபர்ணா தாஸின் வசனங்கள் வழியே அவரின் நியாயத்தை முன்வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த படமும் அபர்ணா தாஸின் கதாபாத்திரத்தை எதிர்மறையாக சித்தரித்ததன் வழியே ‘புனித’ தந்தைக்கான பிம்பத்தை கவின் கதாபாத்திரத்திற்கு கட்டமைத்து வெகுஜன ரசிகர்களிடம் ஆண் பரிவை கோரும் ‘டாடா’ இறுதியில் அதனை சமன் செய்ய அபர்ணா தாஸின் இரண்டு நிமிட ‘நியாய’ வசனங்களை முன்வைக்கிறது.

அதேபோல இந்தப் படத்தின் மற்றொரு பெண் கதாபாத்திரமாக வரும் கவினின் தாயான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தையும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. கவின் வீட்டிற்கு முன் குழந்தையுடன் வந்து நிற்கும்போது பாக்யராஜ் (கணவன்) - கவின் (மகன்) இரண்டு ஆண்டுகளுக்கும் இடையேயான பிரச்சினையில் முடிவெடுக்க முடியாமல் சிக்கியிருப்பார் ஐஸ்வர்யா. சொல்லப்போனால் அடிமைப்பட்டு இருப்பார்.

கட் செய்தால் ஆண்டுகள் பல கழித்து பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கவின் குடும்பத்திற்கு மனம் மாறி செல்லும்போது, அங்கே எளிதாக குற்றத்துக்குள்ளாக்கப்படுவார் ஐஸ்வர்யா. ‘அந்த ஆள கூட நான் மன்னிச்சிடுவேன். உன்ன மன்னிக்க மாட்டேன்’ என அபத்தமான வசனத்தை பேசும் கவின், தாயின் சூழலை புரிந்துகொள்ளாமல் எளிதில் குற்றப்படுத்திவிடுகிறார். கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அடிமை படுத்திய தந்தையை மன்னிக்கும் கவினால், ஆணாதிக்கத்தால் அடிமைப்பட்டு சிக்கி சுயமுடிவை எடுக்க முடியாமல் தவித்த தாய் ஐஸ்வர்யாவை மன்னிக்க முடியவில்லை.

தவிர, படம் ஆண் மீட்பர் மனநிலையை மேலும் மேலும் கெட்டிப்படுத்துவதில் இருந்து விலகவில்லை. ஒட்டுமொத்த படமும் தந்தைக்கான பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மறுபுறம், ‘மீட்பர்’ஆகவும் நாயகன் சித்தரிக்கப்படுகிறார். நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் கவின் அவரது குழுவில் உள்ள பெண் ஒருவர் பணத்தை மாற்றி அனுப்பி தவறு செய்துவிடுகிறார். உடனே அந்தப் பெண் அபர்ணா தாஸிடன் திட்டு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு நின்றிருப்பார். அங்கு வரும் கவின், ‘நான் பாத்துக்குறேன்’ என்ற ரீதியில் அந்த பெண்ணின் பிரச்சினையை சரி செய்வார்.

அதேபோல, அபர்ணா தாஸை பாலியல் ரீதியாக அவரது மேலதிகாரி தொந்தரவு செய்யும் காட்சிகளில் ஆண் ‘மீட்பர்’ஆக தோன்றும் கவின், அவரைக் காப்பாற்றி மீட்டு வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பார். உடனே அபர்ணாவும், ‘சே எவ்ளோ நல்லவர்ல’ என பார்ப்பார். ஆனால், அடிப்படையில் அபர்ணா தாஸ் ஒரு கோபக்கார பெண்ணாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டு பார்வையாளர்களின் வெறுப்புக்கு உள்ளாவார். ஆனால், மேற்கண்ட காட்சியில் மட்டும் ‘மீட்பர்’ ஹீரோ ஸ்கோர் செய்ய வழிவிட்டு அடக்கமான பெண்ணாக மேலதிகாரியின் தொந்தரவை சகித்துக்கொண்டிருப்பார்.

தவிர, ‘வழக்கமா பொண்ணுங்க பிரிச்சு தான் விடுவாங்க... நீ சேர்க்க பாக்குறீயே’ போன்ற வசனமும், படத்தின் தொடக்கத்தில் ‘எங்க வீட்டு பொண்ணு நல்ல பொண்ணு; வீட்டு படிய கூட தாண்டாது’ என பெற்றோர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ‘நான் கர்ப்பமாயிட்டேன்’ என அபர்ணா சொன்னதும், அங்கிருக்கும் காவல் துறை அதிகாரி, ‘நல்ல.... பொண்ணு’ என கிண்டல் செய்வதற்கான அர்த்தமும் விளங்கில்லை. ‘வீட்டை தாண்டாமல், முடங்கி கிடப்பதும், தன் விருப்பமானவரை காதலிக்காமல் இருப்பதுதான் நல்ல பெண்ணுக்கான வரையரையா?

படம் எங்கேஜிங்க்கான திரைக்கதை, ஃபீல்குட் படம் என வெகுஜன பார்வையாளர்களின் பார்வையில் இருந்தாலும், இப்படியான நுணுக்கமான பிரச்சினைகளும், ஆண் மைய சிக்கல்களும் இன்றளவும் சினிமாவில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x