Published : 05 Feb 2023 03:42 PM
Last Updated : 05 Feb 2023 03:42 PM

“படிப்பை கைவிடாதீர்கள்; உங்களை நினைத்து பயமாக உள்ளது” - ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்

“எந்தச் சூழ்நிலையிலும் படிப்பை கைவிடாதீர்கள்; படிப்பு மிகவும் அவசியமானது. எண்ணம்போல் வாழ்க்கை, படிப்பில் கவனம் செலுத்துங்கள். அது தான் உங்களைக் காப்பாற்றும்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தை வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, சம்யுத்தா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், “படத்தின் டீசரில்‘ படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதிங்க' என்று வசனம் வரும். அது தான் இத்திரைப்படத்தின் மையக்கரு. பள்ளியில் படிக்கும்போது பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்திவிடுவார்கள் என்று கவனமின்றி சுற்றி வந்தேன். என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அந்தக் கஷ்டம் தெரிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது. எண்ணம்போல் வாழ்க்கை, படிப்பில் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களைக் காப்பாற்றும். நான் சரிசெய்ய வேண்டியவற்றை ஹோம் வொர்க் செய்கிறேன்” என்றார்.

“நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். எனது காரை பின் தொடர்ந்து வராதீர்கள். உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இதை ஊக்குவிக்கமாட்டேன். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள நீங்கள் வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள்” என்றார்.

மேலும், ‘வடசென்னை 2’ குறித்து வெற்றிமாறன் அலுவலகம் முன்பு சென்று கேளுங்கள். எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக அது நடக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x