Published : 04 Feb 2023 09:48 PM
Last Updated : 04 Feb 2023 09:48 PM
தமிழின் மகத்தான பின்னணி பாடகரான வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, கனிமொழி, நடிகர் கமல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “ஆளுநர் ரவி, பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: “இசைக்கலைஞர் வாணி ஜெயராம் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. திரையிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை என ஐம்பதாண்டுகளுக்கு மேலாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் தந்த இணையில்லாப் பாடகரான அவரது மறைவு இந்திய இசை உலகிற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கலைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா: “தனது மெல்லிசைப் பாடலின் மூலம் இசை ஆர்வலர்களுக்கும், திரையுலகினருக்கும் அற்புதமான அனுபவத்தைக் கொடுத்த பாடகர் வாணி ஜெயராம் அம்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்: “வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
சுபாஷினி மணிரத்னம்: என்ன ஒரு அருமையான குரல். நாங்கள் கடைசியாக சந்தித்தபோது தெளிவாக இருந்தது.‘பொலேரே பாப்பி’, ‘7 ஸ்வரங்கள்’, ‘மல்லிகை’, ‘நானே நானா’, போன்ற அவரது பாடல்கள் மீண்டும் கிடைக்காது. எனது ‘மேகமே மேகமே’ பாடல் மனதிற்கு நெருக்கமானது” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT