Published : 03 Feb 2023 07:06 PM
Last Updated : 03 Feb 2023 07:06 PM
அடைக்கலமிட்டு ஆயுதம் கொடுத்தவனை பழிதீர்க்கும் படலத்தின் பின்புலமாக சில ஆறாக் கதைகள் இருந்தால் அது ‘மைக்கேல்’.
மும்பையின் கேங்க்ஸ்டராக இருக்கும் குருநாத்தை (கௌதம் வாசுதேவ் மேனன்) கொல்ல கையில் கத்தியுடன் ஒருவன் நிற்கிறான். இருவருக்கும் குறுக்கே வரும் 13 வயதான மைக்கேல் (சந்தீப் கிஷன்) குருநாத்தை காப்பாற்றுகிறார். இதில் ஈர்க்கப்பட்ட குருநாத் தன் உயிரை காப்பாற்றிய சிறுவன் மைக்கேலுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன் கையில் ஆயுதமும் கொடுத்து வளர்க்கிறார்.
தன் மகனுக்கு தரும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் மைக்கேலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குருநாத், டெல்லியில் வாழும் தீரா (திவ்யன்ஷா கௌஷிக்) என்ற பெண்ணையும் அவரது தந்தையையும் கொல்லும்படி மைக்கேலுக்கு அசைமென்ட் ஒன்றை கொடுக்கிறார். அதையேற்று டெல்லி செல்லும் மைக்கேல் அந்தப் பெண்ணை கொன்றாரா? இல்லையா? அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
‘கேஜிஎஃப்’ படத்தில் ‘அவன் பக்கம் போயிடாதீங்க சார்’ என கதை சொல்லி ஹைப் ஏற்றுவதுபோல இப்படத்திலும் ஒருவர் மைக்கேலுக்கான ஹைப் ஏற்றுகிறார். இந்த தொடக்கக் காட்சிகள் அப்படியே ‘கேஜிஎஃப்’படத்தை நினைவூட்ட, அத்துடன் பெண் ஒருவர் தன் குழந்தையை ஏந்தி கடைக்காரனிடம் சண்டையிடும் காட்சிகளும் கேஜிஎஃப் சாயலை பிரதிபலிக்காமலில்லை. இந்தக் காட்சிகளைக் கடந்து சென்றால், படம் ஒரு நல்ல கேங்க்ஸ்டர் ட்ராமாவுக்கான மூட்-ஐ ஏற்படுத்திக் கொடுக்கிறது. கேங்க்ஸ்டரான கௌதம் வாசுதேவ் மேனன், அவரைச் சுற்றியிருக்கும் கூட்டம், கொல்ல நினைக்கும் எதிரிக் கூட்டம், சந்தீப் கிஷனின் அடுத்தடுத்த வளர்ச்சி என களம் சூடுபிடிக்கிறது.
படத்தின் கலர் டோனும், பார்த்துப் பார்த்து இழைத்து செதுக்கியிருக்கும் கிரண் கௌசிக் ஒளிப்பதிவும் அட்டகாச திரையனுபவத்தை கொடுக்கின்றன. காட்சி நிகழும் இடத்தைச் சுற்றியிருக்கும் ஒளியை உள்ளிழுத்து அதைக் கொண்டு உருவாக்கியிருக்கும் ப்ரேம்கள், தெருவிளக்குகளில் ஒளிரும் கதாபாத்திரங்களில் முகங்கள்,பெரும்பாலான இடங்களில் தெறிக்கும் சிகப்பு வண்ண லைட்டிங் என காட்சிகளின் அழகு கண்களுக்கு திகட்டா விருந்து.
த்ரில்லர் கதைகளங்களைத் தேடித் தேடிச்சென்று முத்திரைப் பதிக்கும் சாம்.சிஎஸ் காட்சிகளின் இருப்பை நினைவில் நிறுத்த பின்னணி இசையில் பிரம்மிப்பூட்டுகிறார். கணிக்கவியலாத கவலையொன்றை எப்போதும் முகத்தில் சுமந்திருக்கும் சந்தீப் கிஷன் அமைதியான கதாபாத்திரத்துக்குள் தன்னை அடைக்கலமிட்டிருக்கிறார். இரண்டு வார்த்தைகளைத் தாண்டி அவருக்கு பெரிய வசனங்களில்லை. இறுதிக் காட்சியில் மட்டும் கொஞ்சம் பேசுகிறார். சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்திற்கான முகபாவனைகளை வரித்த விதம், சிக்ஸ்பேக் உடல், ஆக்ரோஷம் பொங்கும் ஆக்ஷன் காட்சி என முத்திரைப் பதிக்கிறார் சந்தீப் கிஷன்.
ஸ்டைலான கேங்க்ஸ்டராக கௌதம் வாசுதேவ் மேனன் தொடக்கத்தில் ஈர்த்தாலும் இறுதியில் அவருக்கு இந்தக் கதாபாத்திரம் பொருந்தவில்லையோ எனத் தோன்றுகிறது. நடிகையாக திவ்யன்ஷா கௌஷிக் தேவையான நடிப்பை கொடுக்கத் தவறவில்லை. தனக்கேயுண்டான ‘மாஸ்’ லுக்கில் விஜய் சேதுபதி மொத்த பார்வையாளர்ளையும் கட்டிப்போட்டு ஈர்க்கிறார். வரலட்சுமியை பொறுத்தவரை அவரது சர்ப்ரைஸ் கிக் ஒன்று நடிப்பை பேசுகிறது.
படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ஒரு கேங்க்ஸ்டர் உலகத்தை கட்டமைத்து நம்மை உள்ளிழுக்கிறார். தொடர்ந்து கதை முன்னோக்கி நகரும்போது, காதலால் சந்தீப் கிஷன் தன் இலக்கை தவறவிடுவதைப்போல கதையும் இலக்கியிலிருந்து தவறிவிடுகிறது. நாயகன் - நாயகி இடையிலான காதல் காட்சிகள் அழுத்தமில்லாமல் இருப்பதால் திரைக்கதை சோர்வைத் தருகிறது. காதல் பாடல்கள், ரொமான்ஸ் என பொறுமையாக நகரும் அப்பகுதி முழுவதும் பலவீனம். அளவுக்கு அதிகமான ஒட்டாத ஹைப் வசனங்கள் ஒருபுறமும், சுடப்பட்டு கல்குவாரியிலிருந்து தள்ளிவிட்டு கொல்லப்பட்ட சந்தீப்கிஷனின் மறு எழுச்சி படத்தின் மொத்த லாஜிக்கையும் தின்று தீர்த்துவிடுகிறது.
நாயகனுக்கான மாஸைக் காட்ட தேவையில்லாத கார் எரிப்புக் காட்சி, தந்தையை கொல்ல வந்தவரை நாயகி துரத்தி சென்று காதலிப்பது, இறந்த தந்தை குறித்து கவலைப்பாடமல் நாயகன் மீது மட்டுமே கவனம் செலுத்துவது, ஒட்டாத அம்மா சென்டிமென்ட்டுடன் தெலுங்கு படம் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை. ‘அவன் சிக்கீரம் சாவமாட்டான்’, ‘அவன் ஒரு காட்டாறு’ போன்ற ஹைப் வசனங்களும், அதீத ஆக்ஷன் காட்சிகளும் நெருடல்.
விஜய் சேதுபதி அறிமுகமும், அதைத் தொடர்ந்து வரும் சில காட்சிகளும், பின்புலக் கதையும் பார்வையாளர்களை எங்கேஜிங்காக கொண்டு செல்கிறது. இருப்பினும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இல்லாததும், மற்ற படங்களில் சாயல் ஒட்டிக்கொண்டிருப்பதும் அதன் அடர்த்தியை குறைக்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல கேங்க்ஸ்டர் ட்ராமாவுக்கான கட்டமைப்பை உருவாக்கும் படம் காதல் காட்சிகள் வழியே சென்று திசைமாறி சோர்வை கொடுத்து, அடுத்த பாகத்திற்கான லீடையும் கொடுத்து பயமுறுத்துகிறது. படத்தின் இறுதியில் திரையரங்கம் சார்பில் ‘your safety is our priority’ என்ற வாசகம் தோன்றி மறைகிறது.
மற்ற விமர்சனங்களை வாசிக்க > தி கிரேட் இந்தியன் கிச்சன் Review: தாக்கம் தருவது நிச்சயம்! | பொம்மை நாயகி Review: ஓர் எளிய தந்தையின் போராட்டமும், திகட்டாத திரை அனுபவமும்! | ரன் பேபி ரன் Review: த்ரில்லர் கதைக்களம் திருப்தி அளித்ததா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT