Published : 03 Dec 2016 02:08 PM
Last Updated : 03 Dec 2016 02:08 PM
குடும்ப பிரச்சினைச் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாக, சமூக வலைத்தளத்தில் குஷ்பு மற்றும் ஸ்ரீப்ரியா இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சினைச் சார்ந்த நிகழ்ச்சிகள் குறித்து, "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை. இதை தயவு செய்து நிறுத்தலாமே? நாம் கைப்பிடி அளவு கற்று வைத்திருக்கும் கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போமே? ப்ளீஸ்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீப்ரியா. இந்த கோரிக்கை, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
இது தொடர்பாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் குஷ்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளை வீடுகளில் தடை செய்யுங்கள் - ஸ்ரீப்ரியா
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீப்ரியா, "கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அப்பாவி பொது மக்களைப் பார்த்து பலர் பரிதாப்பப்படுவது தெரிகிறது. ஒரு தொகுப்பாளர் தனக்கு 3 குழந்தைகள் வளர்த்த அனுபவம் இருப்பதாகவும், அதனால் தனக்கு இதற்கான தகுதி இருக்கிறது என்றும் கூறுகிறார்.
இன்னொரு தொகுப்பாளர் தான் வித்தியாசமானவர் என்றும், வித்தியாசமாக சிந்திப்பவர் என்றும், அதனால் பலரால் மதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார். மற்றவரை வா போ என ஒருமையில் அழைப்பது வித்தியாசமானதா?
இத்தகைய நிகழ்ச்சிகள் அதிக டிஆர்பிக்களை பெறலாம். சிலருக்கு இது மற்றவர்களது வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பதைப் போலவே. பஞ்சாயத்து செய்யும் அனைத்து நடிகர்களையும் கோருகிறேன். போதும். நாம் சினிமாவில் மட்டுமே சிறந்த சட்ட நிபுணராகவும், ஆலோசகராகவும் இருக்க முடியும். நிஜ வாழ்க்கையில் அதற்கானவர்கள் தனியாக இருக்கிறார்கள். பொறுப்பான பெரியவர்களாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்கெற்பதை நிறுத்தி உண்மையான மாற்றத்தை உண்டாக்குவோம்.
ட்விட்டரில் இருப்பவர்களே, இத்தகைய டிவி சேனல்களால் சுயநலமாக பயன்படுத்தப்படுகிறீர்கள். அதற்கு இரையாக வேண்டாம் என உங்களுக்குத் தெரிந்த அப்பாவி மக்களிடம் கூறுங்கள். நண்பர்களே, இதை ட்வீட் செய்துவிட்டு இங்கேயே விட்டு விட வேண்டாம். அப்பாவி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் வீடுகளில் இந்த நிகழ்ச்சிகளை தடை செய்யுங்கள்" என்று தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து ட்வீட்டினார் ஸ்ரீப்ரியா.
ஸ்ரீப்ரியாவின் தொடர் ட்வீட்டிற்கு குஷ்புவின் பதில்
ஸ்ரீப்ரியா தொடர்ச்சியாக ட்வீட் செய்ய, அதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்புவும் "நான் பெண்கள் பிரச்சினைகளுக்காக பேசும்போது, குழந்தைகள் நலன், ஓரினச்சேர்க்கையாளர்கள், சம உரிமை, கல்வி ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் போது, வெள்ளத்தில் உதவும் போது யாரும் எனக்கு மகுடம் சூட்ட வில்லை.
படித்த, தெளிவுபெற்ற ஒரு சிலருக்காக எனது பார்வையை முன் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும். இப்படி தெளிவானவர்கள் என நினைத்துக் கொள்பவர்கள் நான் இந்த நிகழ்ச்சியில் எந்த தீர்ப்பும் வழங்குவதில்லை என்பதைக் கூட உணரவில்லை. சட்ட நிபுணர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் அதற்காக இருக்கிறார்கள். நீங்கள் விமர்சிக்கலாம், தூற்றலாம் அல்லது பூங்கொத்து அனுப்பலாம். நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்று தான், நிகழ்ச்சியைப் பாருங்க. அனைத்து விதமான மக்களையும் கொண்டதுதான் இந்த உலகம்.
அவ்வளவாக அறியப்படாத அறிவுஜீவிகளுக்கு பதிலளித்து முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அப்படியே தான் இருக்கிறது. இதற்கு மேல் நான் பதிலளிக்க விரும்பவில்லை. அவர்கள் வேண்டுமானால் தொடரட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT