Published : 16 Jan 2023 03:37 PM
Last Updated : 16 Jan 2023 03:37 PM

‘‘தெலுங்கு இயக்குநர் எனக் கூறுவது என்னைக் காயப்படுத்துகிறது” - ‘வாரிசு’ வெற்றி விழாவில் வம்சி

‘‘தெலுங்கு இயக்குநர் என்று என்னை அடையாளப்படுத்துவது காயப்படுத்துகிறது” என ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வம்சி, “மறைந்த கலை இயக்குநர் சுனில் பாபுவுக்கு இந்தப் படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். விஜய், தில்ராஜு மற்றும் படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய்யிடம் இந்தக் கதை சொல்லும்போது, ‘நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்’ என சொன்னேன். என்னை பலரும் தெலுங்கு இயக்குநர், தெலுங்கு இயக்குநர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி.

‘இது பக்கா தமிழ் படம்’ என்பதைத்தான் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். விஜய் குறித்து நான் எவ்வளவு சொன்னாலும் போதாது. அவரிடம் ‘சார் நீங்கள் ஹேப்பியா?’ என கேட்டேன். அவர் ‘ஹேப்பி’ என்றார். அது போதும் எனக்கு. என் மீது நம்பிக்கை வைத்து இப்படம் கொடுத்ததற்கு நன்றி விஜய். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என்றார்.

தயாரிப்பாளர் தில்ராஜு பேசுகையில், “விஜய்யின் அண்மைக் காலமாக மாஸ், கமர்ஷியல்,ஹீரோயிச படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மாஸ் படங்களில் நடித்து வந்தபோது, வம்சி கதை சொல்ல ‘பிருந்தாவனம்’ படம் உருவானது. பிரபாஸை வைத்து ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ குடும்பப் படத்தை எடுத்தோம். இது தான் என் ஐடியா. என் அப்படியான ஒரு குடும்ப கதையை விஜய்யிடம் ஏன் சொல்லக்கூடாது என நினைத்தேன். அப்படி சொல்லும்போது அவருக்கு பிடித்திருந்தால் இந்தப் படத்தை எடுப்போம் என நினைத்தேன். நான் முன்பே சொன்னது போல சிங்கிள் சிட்டிங்கிள் ஓகே ஆன படம் ‘வாரிசு’. நன்றி விஜய்.

ஏனென்றால் சில படங்களில் காசு வரும். சில படங்களில் வரவேற்பு கிடைக்கும். பணமும், வரவேற்பும் சேர்ந்து கிடைத்த ஒரு படமாக ‘வாரிசு’ உருவாகியுள்ளது. அப்பா - அம்மா என எல்லோரும் படத்தை கொண்டாடுகிறார்கள். ஒரு மாதம் படம் திரையரங்குகளில் திரையிடப்படும். காரணம் குடும்பங்கள் இந்தப் படத்தை கண்டு களிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் பேசுகையில், “வாரிசு எனக்கு முக்கியமான படம். காரணம் நான் ‘பூவே உனக்காக’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்களிடம் புரொகிராமராக பணியாற்றியிருக்கிறேன். என்றைக்காவது விஜய் படத்திற்கு இசையமைத்துவிட வேண்டும் என கனவு கண்டிருக்கிறேன்; அப்படி இசையமைக்கும்போது அது வெற்றியடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்த வெற்றி எல்லாரின் உழைப்பாலும் கிடைத்த வெற்றி. நாங்கள் பார்த்து பார்த்து செதுக்கியது தான் இந்தப் படத்தின் மொத்தப் பாடல்களும். கடைசி 10 நாட்கள் நாங்கள் தூங்காமல் பாடல்களுக்காக உழைத்தோம். அதை திரையில் விஜய் அவ்வளவு அழகாக கொண்டுவந்திருந்தார். அவரது நடனம் தான் பாடல்களுக்கு பெரிய பலம். இன்னும் 10 வருடங்களுக்கு இந்த வெற்றி எங்களைத்தாங்கும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x