Published : 12 Jan 2023 08:21 PM
Last Updated : 12 Jan 2023 08:21 PM
“சினிமா வெறும் பொழுதுபோக்குதான்; அதற்காக உயிரை விடும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “வாரிசு படம் ரிலீஸாக வேண்டும் என்பதால்தான் ‘விஜய் 67’ குறித்த எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். படம் ரிலீஸாகிவிட்டது; இன்னும் 10 நாட்களில் படத்தின் அப்டேட் வெளியாகும். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். இது வெறும் சினிமாதான்; இதில் உயிரை விடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. பொழுதுபோக்கிற்கான விஷயம்தான். மகிழ்ச்சியாக சென்று படம் பார்த்து வீடு திரும்பினாலே போதுமானது. உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது என் கருத்து” என்றார்.
மேலும், ‘தமிழ்நாடு என சொல்ல விரும்புகிறீர்களா? தமிழகமா?’ என எழுப்பப்பட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் தமிழ்நாடு என சொல்லத்தான் ஆசைப்படுகிறேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, அஜித் ரசிகர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் ரோகிணி தியேட்டர் வளாகத்தில் திரண்டு ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்தபரத்குமார் (19), நண்பர்களுடன் ரோகிணி திரையரங்குக்கு சிறப்பு காட்சியை காண வந்திருந்தார். அப்போது, திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ரசிகர்கள் கூட்டத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.
அப்போது, மெதுவாக சென்ற ட்ரெய்லர் லாரி மீது ஏறி பரத்குமார் நடனம் ஆடினார். சிறிது தூரம் சென்றதும் லாரியிலிருந்து கீழே குதித்தார். அதில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார். அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமார் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT