Published : 08 Jan 2023 11:26 AM
Last Updated : 08 Jan 2023 11:26 AM

சிக்னேச்சர் கோரஸ்களின் தேவதூதன் - ஹாரிஸ் ஜெயராஜ் எனும் தனித்துவ இசை மந்திரவாதி

கூட்டைத் தாண்டாத வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வீட்டைத்தாண்டி வானத்தைப் பார்க்காதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை. அவரது வருகைக்கு முன்புவரை வானத்தில் இருந்து பெய்வதாக நம்பிக்கொண்டிருந்த மழையை பாடல் கேட்பவர்களின் நெஞ்சுக்குள் மாமழையாய் பெய்திடச் செய்தவர் ஹாரிஸ்.

தனது மின்சாரப் பாடல்களால், வெட்டுக்கத்திப் போல் இருக்கும் எட்டித் தொடும் வயதினரின் கனவுகளுக்கு இசையூட்டி சூரியனில் செடி முளைக்கச் செய்த மாயக்காரர். பாடல் கேட்பவர்களின் முன் ஜென்மங்களின் ஏக்கங்களைத் தீர்க்க, தன் பொன்னான இசைமடியில் தூங்கவைத்து வசீகரிக்கும் வாஞ்சை கொண்டது அவரது பாடல்கள்.

தயக்கங்களை விலக்கியும், தவிப்புகளைத் தூண்டியும் அடுத்தது என்ன என்ற தேடலை, அவரது பாடலைக் கேட்கும் எல்லோரது மனத்திலும் மஞ்சள் வெயில் மாலை நேரத்தின் வெயிலாய் வீச செய்தது அவரது இசைதான். இரக்கமே இல்லாமல் அறவே வர மறுக்கும் தூக்கத்தைக் களைத்து இமைகள் எப்போதும் ஒன்று சேராமால் இடையில் நின்று இம்சிக்கும் ‘குல்மெஹர்’ மலர்களின் முகவரியைக் கேட்கச் செய்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை.

"உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா" என்று அவரது முதல் படமான மின்னலே திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியதாலோ என்னவோ, அதன்பின்னர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த பல நூறு பாடல்களிலும் அந்த மின்சாரத்தின் பாய்ச்சலைக் கேட்க முடியும். கிடார், பேஸ் கிடார், வயலின், கீபோர்ட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகள் மட்டுமின்றி வீணை, நாதஸ்வரம், மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட நாட்டு வாத்தியங்களின் ஸ்வரங்களின் அந்த எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் மேஜிக்கை ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்த்திக் காட்டியிருப்பார்.

தமிழ்த் திரையுலகில் இப்போது இசையமைப்பாளர்களாக இருக்கும் பலருக்கு புரோகிராமராக பணியாற்றியவர் ஹாரிஸ். இதனால், திரையிசைப் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் ரசனைக்கு தகுந்த இசை விருந்து படைப்பதில் வல்லவர் ஹாரிஸ். தமிழ் திரைப்படங்களில், அதுவரை கேட்டுப் பழகிய வழக்கமான பாடல் டெம்ப்ளேட்களை திருச்சி மலைக்கோட்டைக்கு அழைத்து சென்று திருநெல்வேலி அல்வா வாங்கி கொடுத்தவர் அவர். தனது தனித்துவத்தைக் காட்டும் வகையில் Electronic instruments-களின் அதிர்வுகளால் பாடல் கேட்பவர்களை அதிரச் செய்து மகிழ்வித்தது அவரது இசை.

அவரது இசையில் வெளிவந்த, மின்னலே, சாமுராய், அரசாட்சி, வாரணம் ஆயிரம், சாமி, லேசா லேசா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, கஜினி, கோ, தாம்தூம், ஏழாம் அறிவு, தொட்டி ஜெயா, அந்நியன், நண்பன், துப்பாக்கி, என்னை அறிந்தால், 12 B, கோவில், அயன், பீமா, உட்பட பல படங்கள் மியூசிக்கல் ஹிட் ரகம்தான்.

பெண் குரல்களை உச்சஸ்தாயி நோட்ஸ்களில் பாடவைத்து பாடல்களை உருவாக்குவதற்குப் பதிலாக பேஸ் நோட்களில் பாடச் செய்து, வசீகரா, அனல்மேல பனித்துளி, ஒன்றா இரண்டா ஆசைகள், உனக்குள் நானே, யாரோ மனதிலே போன்ற பாடல்களை இசைத்து பாடல் கேட்கும் விழிமூடி யோசித்தவர்களின் முதல் கனவாய் வருபவர் ஹாரிஸ்.

அதேபோல், ஹாரிஸ் ஜெயராஜ் கோரஸ்களை கையாண்ட விதங்களிலும், பல புதுமைகளைச் செய்திருப்பார். ‘ஆஆஆஆஆ’ , ‘லலலலலலல’, ‘ம்ஹ்ம்ம்ம்’ இதுபோன்ற வழக்கமான கோரஸ் சத்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ஹாரிஸ் ஜெயராஜின் கோரஸ் ஓசைகள். ஓமாகசீயா வோஹியாலா, சோலேயோ ஓ சோனோலேயோ, மெகுமெகுமெகு லாஹி மாஹிமோ, அசும்ப ஓரா இலே அயிபா, இவை எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த பலரது வாழ்நாள் சிறந்த பாடல்களின் தொகுப்பின் தொடக்கத்தில் வரும் கோரஸ் குரல்கள்.

ஆரம்பத்தில் இவையெல்லாம் பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், அந்த புதுவிதமான கோரஸ் ஓசைகள் பாடல் கேட்பவர்களுக்கு புத்துணர்வைத் தந்தன. பிறகு அந்த வித்தியாசமான ஒலியுடன் வரும் கோரஸ்கள்தான் ஹாரிஸ் ஜெயராஜை மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து தனித்துக் காட்டும் சிக்னேச்சர் டோன்களாக மாறின.

இப்படியாக தனது தன்னிகரற்ற இசையால் தமிழ் ரசிகர்களின் மனத்தில் நிறைந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், கூச்சம் கொண்ட தென்றலாகவும், ஆயுள் நீண்ட மின்னலாகவும் நம்மை மாற்றும் வல்லமைக் கொண்டவை. பிறந்த நாள் வாழ்த்துகள் ஹாரிஸ் ஜெயராஜ்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x