Published : 24 Dec 2022 05:41 PM
Last Updated : 24 Dec 2022 05:41 PM

இயக்குநர் பாலாஜி மோகன், அவரது மனைவி குறித்து அவதூறு கருத்து வெளியிட நடிகை கல்பிகா கணேஷுக்கு ஐகோர்ட் தடை

பாலாஜிமோகன் | கோப்புப்படம்

சென்னை: பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நான் காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டேன்.

இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், எங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூடியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக ரூ.1 கோடி வழங்க கல்பிகா கணேஷ் வழங்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு, வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் கல்பிகா கணேஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x