Published : 12 Dec 2022 03:32 PM
Last Updated : 12 Dec 2022 03:32 PM
ஒவ்வொரு முறையும் தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்களை உருவாக்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரது பிறந்தநாளையொட்டி பாக்ஸ் ஆபிஸில் அவரது படங்கள் செய்த சம்பவங்களைப் பார்ப்போம்.
20 ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் ‘பாபா’ ரீ-ரிலீஸ் செய்யும்போது படத்தின் மீதான அந்த மவுசு குறையவில்லை. சில திரையரங்குகளில் ஒரு காட்சியை ஹவுஸ் ஃபுல்லாக்கி ரசிகர்களின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மறுவெளியீடு செய்யப்பட்ட ‘பாபா’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.1.4 கோடி எனக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் ‘2.O’ வசூலை இன்றைக்கும் யாராலும் எட்ட முடியவில்லை. 4 வருடங்கள் கழித்தும் தொட முடியாத சாதனையால் கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் பயணம் 1980-களிலேயே தொடங்கவிட்டது.
பில்லா (1980): 1980-ம் ஆண்டு அமிதாபச்சன் நடித்த 'டான்' திரைப்படம் தமிழில் ரஜினி நடிப்பில் 'பில்லா'வாக மறு ஆக்கம் (ரீமேக்) பெற்றது. ரஜினி இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஆண்டின் அதிக வசூலைக் குவித்த படமாக உருப்பெற்றது 'பில்லா'. கிட்டத்தட்ட 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ராஜா சின்ன ரோஜா (1989): இந்தப் படத்தில் முயல், குரங்கு போன்ற கார்டூன்களைக் கொண்ட அனிமேஷன் காட்சிகளில் ரஜினி நடித்திருந்தார். இதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கள் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கள் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை. 20-7-1989 அன்று வெளிவந்த 'ராஜா சின்ன ரோஜா' 7 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. அதன்பின் பகல் காட்சியாக தொடர்ந்து ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. கிட்டதட்ட 200 நாட்களை நெருங்கிய இந்தப் படம் அந்த ஆண்டில் பெரிய ஹிட் கொடுத்தது.
பாட்ஷா (1995): அந்தக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ரூ.38 கோடி வசூல் செய்தது ரஜினி நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம். பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தப் படம், 368 நாட்களுக்கும் மேலாக பிரமாண்டமாக ஓடியது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் அதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய வணிகப் படங்களில் ஒன்றான இந்தப் படம் ரஜினியின் கரியரில் முக்கியமான படமாகக் கருதப்பட்டது.
முத்து (1995): மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான ரஜினியின் ‘முத்து’ தமிழகம் முழுவதும் 175 நாட்கள் ஓடியது. குறிப்பாக, ஜப்பானில் 1998-இல் டப்பிங் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியானபோது புதிய சாதனையை நிகழ்த்தியது. ஜப்பானில் அதிகம் வசூல் செய்யப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. ‘முத்து’ தமிழ் ‘டைட்டானிக்’ எனவும் வர்ணிக்கப்பட்டது. ஜப்பானில் மட்டும் படம் ரூ.23.50 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் உருவாகியிருந்தனர்.
படையப்பா (1999): கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படம் ரஜினியின் அதுவரை வெளியான படங்களில் புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்தது. 1999-ம் ஆண்டு கோலிவுட்டில் பெரிய அளவில் எந்தப் படங்களில் ஹிட்டடிக்காத நிலையில் ‘படையப்பா’ உலகம் முழுக்க 44 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமல்லாமல் கோலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங்கை கொடுத்த படம் என்ற பெருமையையும் ‘படையப்பா’ பெற்றது. படம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் வெற்றியைப் பெற்றது.
சந்திரமுகி (2005): பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த இந்தப்படம் திரையரங்குகளில் மட்டும் 890 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது. கோலிவுட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் அந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக ஓடிய படம் என்ற பெருமையை பெற்றது. படம் உலகம் முழுவதும் ரூ.70 கோடி வரை குவித்து புதிய சாதனை படைத்தது. இது தவிர, ஜெர்மன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்தையும் ‘சந்திரமுகி’ பெற்றது குறிப்பிடதக்கது.
சிவாஜி (2008): இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான இப்படம், உலக அளவில் ரூ.153 கோடியை வசூலித்து மிரட்டியது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.65 கோடியை படம் வசூலித்தது. இது தவிர, உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது ’சிவாஜி’.
எந்திரன் (2010): ஷங்கர் இயக்கத்தில் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.290 கோடி வரை வசூலித்து இந்திய திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்தது. எந்திரன் டப்பிங் செய்யப்பட்டு இந்தி, தெலுங்கு பதிப்புகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது நினைவுக்கூரத்தக்கது.
கபாலி (2016): பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூலித்தது. வணிக ரீதியாக மட்டும் சாதனை படைக்காமல், படத்தின் டீசருமே சாதனை நிகழ்த்தியது. மூன்றே நாட்களில் 1 கோடி பார்வைகளைப் பெற்று அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்பட டீஸர் என்ற புகழ் பெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.300 கோடியை அள்ளியது.
2.0 (2018): ரஜினிகாந்த் நடித்ததில் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான இப்படம் கோலிவுட்டின் வீழ்த்த முடியாத சாதனையை படைத்தது.. உலக அளவில் ரஜினியின் '2.0' படம் ரூ.700 - 750 கோடியை வசூலித்து முத்திரைப் பதித்தது. இந்தச் சாதனையை இதுவரை எந்த தமிழ்ப் படமும் முறியடிக்க முடியவில்லை. இந்திய அளவில் ‘பாகுபலி’க்கு அடுத்த இடத்தில் வசூல் சாதனையில் சிம்மாசனமிட்டுள்ளது இப்படம். 4 ஆண்டுகள் கழித்தும், அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தால் கூட இந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT