Published : 02 Dec 2016 05:32 PM
Last Updated : 02 Dec 2016 05:32 PM
உரிமை இல்லாமல் தவிக்கும் தன் சமூகத்து மக்களுக்காக வியூகத்துடன் செயல்படும் இளைஞனின் கதை 'மாவீரன் கிட்டு'.
சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்துச் செல்வதற்குக் கூட பாதை மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் சமூகத்தில் ஐஏஎஸ் கனவுடன் கல்லூரியில் படிக்கிறார் கிட்டு (விஷ்ணு விஷால்). அவரின் கனவை சிதைக்கும் வகையில் ஒரு கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. ஜாமீனில் வெளியே வரும் கிட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா, தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து எறிந்தாரா, ஐஏஎஸ் கனவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு திரைக்கதை பதில் சொல்கிறது.
மிகப் பெரிய சாதனையை படைத்துவிட்டு அதுகுறித்த அறிவிப்பைக் கூட தெரிந்துகொள்ளாமல் இருக்கும் ஹீரோவின் அறிமுகக் காட்சி எளிமையாக ஈர்க்கிறது. நெருக்கடியில் சாதுர்யமாக செயல்படுவது, பிரச்சினை வெடிக்காமல் இருக்க தாழ்ந்து போவது, எந்த தவறும் செய்யாத கையறு நிலையை வெளிப்படுத்துவது என்று விஷ்ணு விஷால் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தோற்றமும், நிதானமான அணுகுமுறையும் விஷ்ணு பாத்திரத்துக்கு வலு சேர்க்கின்றன.
காதலில் விழும் வழக்கமான கதாநாயகி பாத்திரம் ஸ்ரீதிவ்யாவுக்கு. அந்த நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
அலட்டல் இல்லாத அழுத்தமான பாத்திரத்தை பார்த்திபன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். சூரிக்கு ஒரு காட்சியில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா ஆகியோர் கதாபாத்திரங்களில் சரியாகப் பொருந்திப் போகிறார்கள்.
சூர்யாவின் ஒளிப்பதிவு கொடைக்கானல், பழனியின் அழகை கண்களுக்குள் கடத்துகிறது. இமானின் இசையில் உயிரெல்லாம் ஒன்றே, கண்ணடிக்கல கை புடிக்கல பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உன் கூட துணையாக பாடலை முன்பாதியில் சேர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில் துருத்திக் கொண்டு நிற்கிறது. இமானின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.
1987-ல் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ப தொலைபேசி, புளிப்பு மிட்டாய், ஹேர்ஸ்டைல், சட்டை என அந்த காலகட்டத்தில் உள்ளதைப் பதிவு செய்த விதம் சிறப்பு. பாம்பு கடித்த கல்லூரி மாணவியை நண்பர்கள் காப்பாற்றும் விதம் படத்துக்கு நியாயம் சேர்க்கிறது.
ஒரு சமூகத்தின் வலிகளையும், வடுக்களையும் போக்குவதற்காக இளைஞனின் தீர்க்கமான தியாகத்தைக் குறித்து பதிவு செய்த விதத்தில் இயக்குநர் சுசீந்திரன் கவனம் பெறுகிறார். மெதுவான படம்தான் என்றாலும், முதல் பாதியில் அலுப்பு தட்டவில்லை. கதாபாத்திரத் தேர்விலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
ஆனால், அந்த கவனத்தை கதை, திரைக்கதையில் தவறவிட்டதால் இரண்டாம் பாதி தடுமாற்றம் அடைகிறது. படம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் இயக்குநருக்கு இருக்கும் தெளிவின்மையை காட்சிகள் உணர்த்தி விடுகின்றன.
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்ற விஷ்ணுவை வழக்கிலிருந்து விடுவிக்க ஸ்ரீதிவ்யாவால் முடியுமே. அவர் அன்றைய நாளில் நடந்ததைச் சொல்லி இருந்தால் இத்தனை கடும் முயற்சிகள் ஏன்? ஒரு கொலை நடந்த பிறகும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று குற்றவாளிகளைத் தேடும் படலத்தை படத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட யாருமே கண்டுகொள்ளாதது ஏன்? உரிமைகளைப் பெற வேறு வழியே இல்லாதது போல் விஷ்ணு ஏன் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேள்விகள் நீள்கின்றன.
இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும் 'மாவீரன் கிட்டு' படம் சிறப்பான பதிவாக மாறுவதற்கு இடம்தரவில்லை. பிரச்சினையின் தீவிரத்தைப் பேசாமல், வெறுமனே ஒரு முடிவை நோக்கி நகர்ந்ததால் 'மாவீரன் கிட்டு' மிதமான வேகத்தில் பயணிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT