Published : 30 Nov 2022 05:39 PM
Last Updated : 30 Nov 2022 05:39 PM

மழை விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை வென்றது நியூசிலாந்து அணி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் முடிவும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி அணிக்கு சுப்மன் கில், ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ரன்னிலும், தவான் 28 ரன்னிலும், ரிஷப்பண்ட் 10 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், தீபக் ஹூடா 12 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறிய நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - வாஷிங்டன் சுந்தர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டுகளையும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பின் ஆலன்-கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 17-வது ஓவரில்தான் தொடக்க ஜோடி பிரிந்தது. ஆலன் 54 பந்தில் 57 ரன் எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டம் இழந்தார். 18-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 104 ரன்களை நியூசிலாந்து அணி சேர்த்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி தொடர்வதில் சிக்கல் ஏற்படுத்தியதை அடுத்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x