Published : 13 Aug 2016 01:30 PM
Last Updated : 13 Aug 2016 01:30 PM
பார்வையற்ற மனிதர்களின் அன்பை 'குக்கூ'வில் சொன்ன ராஜூமுருகனின் இரண்டாவது படம் 'ஜோக்கர்'.
கழிப்பறை கட்டினால் கல்யாணத்துக்குத் தயார் என்று குரு சோமசுந்தரத்திடம் சொல்கிறார் ரம்யா பாண்டியன். கழிப்பறை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் சோமசுந்தரம். அதில் நடக்கும் கமிஷன், கட்டிங் அவரது வாழ்க்கையையே திசை மாற்றுகிறது. சோமசுந்தரத்துக்கு நடந்தது என்ன? அவர் என்ன ஆகிறார் என்பது மீதிக் கதை.
வெறுமனே காமெடி செய்வது, ரைமிங்கில் பன்ச் வசனம் பேசுவது, கை தட்டலுக்காக சில வசனங்களைப் புகுத்துவது என்று இல்லாமல் சமூகம், மனிதன், அரசியல், சூழல் என எல்லாவற்றிலும் நையாண்டியை அர்த்தமுள்ளதாக பதிவு செய்த விதத்தில் ராஜூமுருகன் கவனிக்க வைக்கிறார்.
படத்தின் ஒட்டுமொத்த உயிர்ப்பும் உழைப்பும் குரு சோமசுந்தரத்தின் நடிப்புதான். சாதாரண குடிமகனாக கேள்வி கேட்கும் தொனி, ரம்யாவைப் பிரியமுடன் பார்க்கும் பார்வை, பவாவின் பாச உணர்வு, மு.ராமசாமியிடம் தோழமை அணுகுமுறை, காயத்ரி கிருஷ்ணாவிடம் ஃபேஸ்புக் அப்டேட் குறித்து விளக்கம் கேட்பது என அத்தனை அத்தியாயங்களிலும் சோமசுந்தரம் தனித்துத் தெரிகிறார். அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மன்னர் மன்னன் பாத்திரத்துக்கு அத்தனை பொருத்தம்.
'நாம ஓட்டு போட்டுதானே அவன் ஆட்சிக்கு வர்றான். அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன் அநியாயம் பண்ணா அவனை டிஸ்மிஸ் பண்ண உரிமையில்லையா?', 'சத்துக்குறைவினால 12 குழந்தைங்க செத்துப் போச்சு. மயக்க மருந்தை மாத்திக் கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போனாங்க. கர்த்தரும் காப்பாத்தலை, மாரியம்மாளும் காப்பத்தலையே', 'நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?', 'சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்க'னுதான் சொல்றோம் என சோமசுந்தரம் பேசும் வசனங்கள் அத்தனையிலும் ஆற்றாமை, ஆதங்கம், கோரிக்கையே வெளிப்படுகிறது.
ரம்யா பாண்டியன் கதாநாயகி பாத்திரத்துக்கு பொருத்தமான வார்ப்பு. கழிப்பறை இருந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன் என கறார் காட்டுவது, ‘சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்!’ என சாமானிய அம்மாவாக பேசுவது என இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார்.
நாடகப் பேராசிரியர் மு.ராமசாமி படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார். 'அப்பல்லோவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா எதுக்கு கவர்மென்ட்? ஓட்டை எல்லாம் அப்பல்லோவுக்கு குத்தலாமா?', 'இந்த ஜனங்க இப்படிதான். தீயவங்க பின்னாடி போகும். கெட்டவங்களை ஜெயிக்க வைக்கும். அபத்தங்களைக் கொண்டாடும். அதுக்காக நாமளும் அப்படியே பதவிக்கும் பவுசுக்கும் அடிமையாக முடியுமா' என ஒற்றை குரலாய் ஓங்கி அடிக்கிறார்.
பவா.செல்லத்துரையின் பாத்திரம் கதைப் போக்குக்கு உறுதுணை புரிகிறது. 'நீ ஒரு ரூரல் பியூட்டி டா' என சோமசுந்தரத்துக்கு நம்பிக்கை ஊட்டுவது ரசனை. 'இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டானுங்களே, 'ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே இல்லைடா', 'பொம்பளை புள்ளைங்க ஒதுங்குற இடத்துல லைட்டை போட்டுக்கிட்டு போற.. ஆஃப் பண்ணுடா...', 'அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தூக்கிப் போடுற எச்சை சோறை தாண்டா நாம பொறுக்கினு வர வேண்டியிருக்கு' என பவா பேசும் எல்லா வார்த்தைகளிலும் நிதர்சனம் தெறிக்கிறது.
சிறைவாசியாக இருக்கும் அருள் எழிலன், ' வெளியே கசகசன்னு இருக்கு. அதான் உள்ளே வந்துட்டேன். சம்மர்ல வந்துடுவேன்.வின்டர்ல போய்டுவேன்' என இயல்பான உடல்மொழியில் பேசும் போது தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது.
செழியனின் கேமரா குக்கிராமத்தின் சந்து பொந்துகள், இண்டு இடுக்குகளிலும் பயணிக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் ஜாஸ்மின் பாடலில் காதல் வழிகிறது. ஓல ஓல குடிசையில பாடல் உருக வைக்கிறது. பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.
ராஜூமுருகனின் கதை, திரைக்கதை சாமானியன் பார்வையிலிருந்து அரசியலை விமர்சிக்கும் உணர்வை மிகச் சரியாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.
ஆமை விடும் போராட்டம், ரிவர்ஸில் நடக்கும் போராட்டம், காறித்துப்பும் போராட்டம், வாயில் அடித்துக்கொள்ளும் போராட்டம், ஆணிப்படுக்கை போராட்டம், விஷப் பாம்புகளுடன் போராட்டம், குளோபல் போராட்டம்,சுகாதாரத்தை வலியுறுத்த திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு காலைவணக்கம் சொல்லும் போராட்டம், சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம், கோவணப் போராட்டம் என போராட்டத்துக்கான நூதன வடிவ உத்திகள் கவன ஈர்ப்பு அத்தியாயங்கள்.
'குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்ட சோறு வாங்கி தின்னுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க', 'அவ அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்', 'இப்போலாம் ஹீரோவைவிட வில்லனைத்தானே இந்த சனங்களுக்குப் பிடிக்குது', 'உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல!' ஆகிய ராஜூமுருகன் - முருகேஷ்பாபு வசனங்களுக்கு தியேட்டர் முழுக்க கைதட்டல்கள்.
'சிவன் நெற்றியில் இருக்கும் பிறைதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையாவும் இருக்கு. அப்படிப் பார்த்தால் இருவரும் முப்பாட்டன்கள்தான். என் தம்பிகளே. உறவுகளே... நம் ஒற்றுமைக்கு குறுக்கே எவன் வந்தாலும் அவர்களை நெம்பி எடுப்பார்கள் என் தம்பிமார்கள்' என்று ஒருவர் இப்தார் நோன்பில் பேசுவது, தண்ணீர் பிரச்சினையில் இயற்கை சூறையாடல் என ஒருவர் கொந்தளிப்பது, ஹெலிகாப்டருக்கு கும்பிடு போடாம அமைச்சர்கள் இருக்காங்களா? என கேள்வி கேட்பது வரை சம கால அரசியல்வாதிகளைப் பகடி செய்திருக்கும் விதம் ஆழமானது.
ஆனால், இன்னும் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சோமசுந்தரத்தின் ஃபிளேஷ்பேக் காட்சிகளை இன்னும் சில காட்சிகளுக்கு முன்பே வைத்திருக்கலாம். இதை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் 'ஜோக்கர்' கம்பீர சினிமா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT